ஐஸ்லேண்ட் கிரிக்கெட் அழைப்பும்.. அம்பத்தி ராயுடு ஓய்வும்..
அம்பத்தி ராயுடுவுக்கு நிரந்தர வீடு தருவதாக ஐஸ்லேண்ட் கிரிக்கெட் வாரியம் அறிவித்த இரண்டாவது நாளில் அவர் ஓய்வு பெற்றுள்ளார்.
இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு அனைத்து வித சர்வதேச போட்டிகளில் இருந்தும் விலகுவதாக தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்த போது அணியிலிருந்த அம்பத்தி ராயுடு பெரிதாக ரன்களை குவிக்கவில்லை. இதைத்தொடர்ந்து ஐபிஎல் தொடரிலும் அவர் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதையடுத்து உலகக் கோப்பைக்காக இந்திய அணியில் அம்பத்தி ராயுடுவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அதேசமயம் உலகக் கோப்பை தொடரை விளையாடிக்கொண்டிருந்த தவான் காயம்பட்டு, தொடரிலிருந்து வெளியேறினார். அப்போது அம்பத்தி ராயுடுவுக்கு வாய்ப்பு வரும் என எதிர்பார்த்த போது, அந்த வாய்ப்பு ரிஷாப் பண்ட்க்கு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் காயம் காரணமாக விலகினார். இப்போதும் அம்பத்தி ராயுடுக்கு வாய்ப்பு கிடைக்காமல், மயாங் அகர்வாலுக்கு கிடைத்தது.
இதனை குறிப்பிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்த ஐஸ்லேண்ட் கிரிக்கெட் வாரியம், “அகர்வால் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி, பவுலிங் ஸ்டிரைக் ரேட் ஆக 72.33 கொண்டிருக்கிறார். எனவே அம்பத்தி ராயுடு-வாவது தனது 3டி கிளாஸை கழட்ட வேண்டும். அவர் ஒரு சாதாரண மூக்கு கண்ணாடியை அணிந்து கொண்டு, அவருக்காக நாங்கள் வழங்கும் வாய்ப்பை பார்க்க வேண்டும். அவர் எங்களுடன் இணைய வேண்டும். நாங்கள் ராயுடுவை விரும்புகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.