“தவானுக்கு பதில் மாற்று வீரர் ஏன் அணியில் சேர்க்கப்படவில்லை” - விராட் கோலி விளக்கம்
காயம்பட்டுள்ள ஷிகார் தவானுக்கு பதில் மாற்று வீரரை இன்னும் அணியில் சேர்க்காமல் இருப்பது குறித்து கேப்டன் விராட் கோலி விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் அபாரமாக சதமடித்தார். இந்தப் போட்டியின்போது, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் கம்மின்ஸ் வீசிய பந்து, தவானின் இடது கை பெருவிரலில் பலமாகத் தாக்கியது. வலியுடன் விளையாடிய தவான், 109 பந்தில் 117 ரன் குவித்தார். விரலில் கடுமையான காயம் ஏற்பட்டதை அடுத்து, அடுத்த சில போட்டிகளில் அவர் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டது.
ஷிகார் தவானுக்கு பதில் யார் விளையாடப் போகிறார் என்பது குறித்த பேச்சுகள் அடிபடத் தொடங்கியது. உலகக் கோப்பை தொடரில் விளையாட இளம் வீரர் ரிஷப் பண்ட்டை இங்கிலாந்துக்கு அழைத்தது பிசிசிஐ. இருப்பினும், அதிகாரப்பூர்வமாக ரிஷப் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள விராட் கோலி, “ஷிகார் தவான் விளையாட விரும்புகிறார். விளையாட வேண்டுமென்ற நேர்மறையான அவரின் எண்ணம், காயத்தை குணப்படுத்தவும் உதவும். விரைவில் அவரது காயம் குணமடையும் என்று நம்புகிறேன். லீக் போட்டிகளில் இரண்டாம் பாதி மற்றும் அரையிறுதியில் அவர் விளையாடுவார். அதனால்தான் அவரை இன்னும் அணியில் இருந்து வெளியேற்றவில்லை” என்று கூறியுள்ளார்.
ஷிகார் தவான் அதிகாரப்பூர்வமாக அணியில் இருந்து நீக்கப்பட்டால்தான், அவருக்கு பதிலாக மாற்றுவீரரை களமிறக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.