வார்னரை ஏற்றுக்கொண்டு ஆட்டோகிராஃப் கேட்ட சிறுவர்கள்
ரசிகர்கள் கூட்டத்திலிருந்த சிறுவர்கள் ஆட்டோகிராஃப் கேட்ட சம்பவம் வார்னரை மகிழ்ச்சி அடைய செய்தது.
ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் தொடக்க பேட்ஸ்மேன் வார்னர் ஆகியோர் பல மாதங்களுக்கு முன்னர் கிரிக்கெட்டிலிருந்து நீக்கப்பட்டனர். மைதானத்தில் பந்தை சேதப்படுத்தியதற்காக அவர்கள் இருவர் மீது ஐசிசி அப்போது நடவடிக்கை எடுத்திருந்தது. இதனால் பல மாதங்களாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்த அவர்கள், அண்மையில் ஐசிசி தடையை வாபஸ் பெறவே ஐபிஎல் தொடரில் விளையாடினர். இந்த தொடரில் வார்னர் அனைத்து வீரர்களையும் விட சிறப்பாக பேட்டிங் செய்து 692 ரன்கள் குவித்தார். அதேசமயம் ஸ்மித்தும் தனது ஃபார்மை மீட்டார்.
இதைத்தொடர்ந்து உலகக் கோப்பை போட்டிகள் தொடங்க, இருவரும் பயிற்சிப் போட்டியில் விளையாடினர். அன்றைய தினம் ரசிகர்கள் பலர் இருவருக்கும் எதிராக மைதானத்தில் விமர்சனங்களை வைத்தனர். அவர்கள் களமிறங்கும் போது யாரும் வரவேற்பு அளிக்கவில்லை. அன்றைய போட்டியில் ஸ்மித் சதம் அடித்தார்.
இந்நிலையில் உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா விளையாடும் முதல் போட்டி, நேற்று ஆப்கானிஸ்தானிற்கு எதிராக நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதல் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 207 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அவர்கள் பேட்டிங் செய்யும் போது, வார்னர் பவுண்டரி லைன் அருகே ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ரசிகர்கள் யாரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. விமர்சித்து கோஷம் எழுப்பவில்லை. அத்துடன் ரசிகர்களுடன் இருந்த சிறுவர்கள் சிலர் அவரிடம் ஆட்டோகிராஃப் கேட்டனர்.
நீண்ட விமர்சனங்களுக்குப் பிறகு ரசிகர்கள் தன்னிடம் ஆட்டோகிராஃப் கேட்டதால், மகிழ்ச்சியடைந்த வார்னர் பூரிப்புடன் அவர்களுக்கு ஆட்டோகிராஃப் போட்டார். சில சிறுவர்கள் தங்கள் ஆடைகளின் மீது ஆட்டோகிராஃப் பெற்றுக்கொண்டனர். அப்போது அங்கிருந்த ரசிகர்கள் கைட்டி வார்னை ஆதரித்தனர். பின்னர் ஆஸ்திரேலியா இரண்டாவது பேட்டிங் செய்த போது வார்னர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 89 (114) ரன்கள் குவித்தார்.