உலகக் கோப்பை டி20 போட்டி: பொறுத்திருந்து முடிவெடுக்க ஐசிசி உத்தேசம் !
இந்தாண்டு டி20 உலகக் கோப்பை நடத்துவது குறித்த முடிவை இன்னும் ஒரு மாதம் கழித்து எடுக்க ஐசிசி நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 15 ஆம் தேதி வரை இருபது ஓவர் உலகக்கோப்பை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக, உலகளவில் விளையாட்டு தொடர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், நடப்பு ஆண்டு இருபது ஓவர் உலகக் கோப்பை தொடர் நடைபெறுமா எனச் சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பையைத் திட்டமிட்டபடி நடத்தலாமா அல்லது அடுத்தாண்டு வரை ஒத்திவைக்கலாமா என்பது குறித்து ஐசிசி நிர்வாகக் குழு மே 28 ஆம் தேதி கூடி ஆலோசித்தது. ஆனால் திட்டவட்டமான முடிவுகள் ஏதும் எடுக்கப்படவில்லை. இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ஐசிசி நிர்வாகக் குழு உறுப்பினர் ஒருவர் "கூட்டத்தின்போது மூன்று முக்கிய விஷயங்களை விவாதித்தோம். முதலில் திட்டமிட்டபடி போட்டித் தொடரை நடத்துவது, இரண்டாவது ரசிகர்களை மைதானத்தில் அனுமதிப்பது, மூன்றாவது ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்துவது" என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து டி20 உலகக் கோப்பை குறித்து முடிவுகளை எடுக்க ஐசிசி நிர்வாகக் குழு மீண்டும் கூடியது. அதன்படி சில முடிவுகள் எடுக்கப்பட்டதாக ஐசிசி தலைமை செயல் அதிகாரி மனு சாவ்னே கூறினார். மேலும் "உலகெங்கும் ஏற்பட்டிருக்கும் தொற்று குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம். டி20 உலகக் கோப்பை நடத்துவதற்கு சரியான நேரம் வரும்போது முடிவுகள் அறிவிக்கப்படும். இப்போதுள்ள சூழ்நிலையை கவனித்து பொறுமையாக இருந்து அனைவரிடமும் கலந்து ஆலோசிக்கப்பட்ட பின்பு அடுத்த மாதம் முடிவு எடுக்கப்படும். அந்த முடிவு யாரையும் பாதிக்காத வகையில் எடுக்கப்படும்" என்றார் அவர்