டி20 தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) வெளியிட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி, அங்கு நடைபெற்ற டெஸ்ட் தொடரில் போராடி தோல்வி அடைந்தது. இருப்பினும், 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அதிரடி வெற்றியை பெற்றது. இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி, டி20 போட்டியில் சற்று சரிவை சந்தித்தார். கடைசி 2 டி20 போட்டியில் அவர் மொத்தம் 27 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் சர்வதேச டி20 பேட்டிங் தரவரிசை பட்டியலில் 3வது இடத்திலிருந்த விராட் கோலி 6 இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
6வது இடத்திலிருந்த இந்திய பேட்ஸ்மேன் ராகுல் 8வது இடத்திற்கு சென்றுள்ளார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் 143 ரன்கள் குவித்த தவான், 14 இடங்கள் முன்னேறி 28வது இடத்திற்கு வந்துள்ளார்.
பந்துவீச்சாளர்கள் பட்டியலில் பும்ரா 4வது இடத்திலிருந்து 5வது இடத்திற்கு பின்நோக்கி நகர்ந்துள்ளார்.
இருப்பினும் கடந்த 3 டி20 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய புவனேஷ்குமார் 20 இடங்கள் முன்னேறி 12வது இடத்தை பிடித்துள்ளார்.