IND Vs SA டி20 உலகக்கோப்பை: வீணானது சூரியகுமாரின் அதிரடி!

IND Vs SA டி20 உலகக்கோப்பை: வீணானது சூரியகுமாரின் அதிரடி!
IND Vs SA டி20 உலகக்கோப்பை: வீணானது சூரியகுமாரின் அதிரடி!

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.  

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்12 சுற்றில் இன்று இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. பெர்த் ஸ்டேடியத்தில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் இறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் லுங்கி என்கிடியின் வேகத்தில் இந்திய அணியின் முன்வரிசை பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் நடையை கட்டினர். அபாரமாக பந்துவீசிய என்கிடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ரோகித் சர்மா 9 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 15 ரன்களுடனும், விராட் கோலி 12 ரன்களுடனும், தீபக் ஹூடா ரன் எதுவும் எடுக்காமலும், ஹர்திக் பாண்டியா 2 ரன்களுடனும் வெளியேறி அதிர்ச்சியளித்தனர். 49 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறிக் கொண்டிருந்த இந்திய அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார் சூர்யகுமார் யாதவ். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 30 பந்துகளில் அரை சதம் கடந்தார்.  ஒருபுறம் விக்கெட்டுகள் மளமளவென சரிந்து கொண்டிருக்க, சூர்யகுமாரின் அதிரடியால் இந்திய அணி கவுரவமான ஸ்கோரை பெற முடிந்தது. அவர் 40 பந்துகளில் 6 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் உடன் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. தொடக்கத்தில் மிரட்டலான பந்துவீச்சை வெளிப்படுத்திய அர்ஷ்தீப் சிங் தென்னாப்பிரிக்கா அணியின் குயின்டன் டி காக் (1 ரன்), ரிலீ ரோசோவ் (0 ரன்) ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். கேப்டன் டெம்பா பவுமாவை 10 ரன்னில் வெளியேற்றினார் முகம்மது ஷமி. இதனால் 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்த தென்னாப்பிரிக்கா அணியை ஐடன் மார்க்ராம் மற்றும் டேவிட் மில்லர் இருவரும் சேர்ந்து மீட்டனர்.  இருவரின் பொறுப்பான ஆட்டத்தால் இலக்கை நோக்கி அந்த அணி சீராக பயணித்தது. 52 ரன்கள் சேர்த்த நிலையில் மார்க்ராம், ஹர்திக் பாண்டியாவின் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இருப்பினும் டேவிட் மில்லர் நின்று விளையாடி அணியை கரை சேர்த்தார். கடைசி ஓவரின் 4வது பந்து முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி பெற்றது. கடைசிவரை களத்தில் இருந்த டேவிட் மில்லர், 46 பந்துகளில் 4 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் உடன் 59 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் முதல் தோல்வி இதுவாகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com