இந்தியா - நெதர்லாந்து இன்று பலப்பரீட்சை: ஃபார்முக்கு திரும்புவார்களா தொடக்க வீரர்கள்?

இந்தியா - நெதர்லாந்து இன்று பலப்பரீட்சை: ஃபார்முக்கு திரும்புவார்களா தொடக்க வீரர்கள்?
இந்தியா - நெதர்லாந்து இன்று பலப்பரீட்சை: ஃபார்முக்கு திரும்புவார்களா தொடக்க வீரர்கள்?

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் தங்களது தவறை திருத்திக் கொண்டு பழைய நிலைக்கு திரும்ப இன்றைய ஆட்டம் அருமையான சந்தர்ப்பம்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தற்போது சூப்பர்12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று ஒரேநாளில் 3 போட்டிகள் நடைபெறுகின்றன. இந்திய நேரப்படி இன்று நண்பகல் 12.30 மணிக்கு சிட்னியில் நடைபெறும் போட்டியில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதிய இந்திய அணி, விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தால் கடைசி பந்தில் த்ரில் வெற்றியை ருசித்தது. இந்நிலையில் தனது 2வது ஆட்டத்தில் குட்டி அணியான நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.

இந்திய அணியில் தொடக்க வரிசை பேட்டிங் தற்போது தடுமாற்றத்தில் உள்ளது. ரோகித் சர்மா, கே.எல். ராகுல் இருவரும் திறமையான வீரர்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த ஜோடி முக்கியமான ஆட்டத்தில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து விடுகிறது. இதனால் அவர்களுக்கு பின்னால் வரும் வீரர்களுக்கு நெருக்கடியான நிலை ஏற்படுகிறது. சூர்யகுமார் யாதவும் கொஞ்சம் அவசரப்படாமல் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. எனவே இந்திய அணியின் முன்வரிசை வீரர்கள் தங்களது தவறை திருத்திக் கொண்டு பழைய நிலைக்கு திரும்ப இந்த ஆட்டம் அருமையான சந்தர்ப்பம். மற்றபடி பேட்டிங் மற்றும் பவுலிங்கில் வலுவாக இருக்கும் இந்திய அணி, இன்றைய போட்டியில் எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நெதர்லாந்து அணி தனது முதல் போட்டியில் வங்காளதேசத்திடம் 9 ரன்கள் வித்தியாசத்தில்தான்  தோல்வி அடைந்தது. அதே போன்ற போராட்டத்தை இன்றும் வெளிப்படுத்த அந்த அணியினர் முயற்சிப்பார்கள். இதனிடையே, செய்தியாளர் சந்திப்பில் பேசிய நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ், இன்றைய போட்டியில் நாங்கள் வெற்றி பெற மாட்டோம் என்று பெரும்பாலானவர்கள் கருதுவதாகவும், முடிந்தவரை சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதே எங்களது நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் நெதர்லாந்து அணி, இந்தியாவுடன் இதற்கு முன்பு மோதியதில்லை. ஆனால் ஒரு நாள் போட்டியில் இரு முறை மோதி இரண்டிலும் நெதர்லாந்து தோற்று இருக்கிறது.

இதையும் படிக்கலாமே: ஒரே நாளில் மூன்று அசத்தலான ஆட்டங்கள் - டி20 உலகக் கோப்பையில் இன்று கிரிக்கெட் திருவிழா
Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com