‘சராசரி பிட்ச் தான்’... அகமதாபாத் 'பிட்ச்' சர்ச்சைக்கு தீர்ப்பு சொன்ன ஐசிசி!
இந்தியா - இங்கிலாந்து இடையே நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டி இரண்டே நாளில் முடிவடைந்ததையடுத்து அகமதாபாத் ஆடுகளத்தின் தரம் குறித்து பெரிதும் விவாதிக்கப்பட்டது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே அகமதாபாத்தில் நடைபெற்ற 3-ஆவது டெஸ்ட் போட்டி இரண்டே நாள்களில் முடிவடைந்தது. இதில் இந்திய அணி அபார வெற்றிப்பெற்றது. ஆனால் அகமதாபாத் பிட்ச் மிக மோசமாக தயாரிக்கப்பட்டு இருப்பதாக இங்கிலாந்து முன்னாள் வீரர்களும், இங்கிலாந்து வீரர்களும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி இதே அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டி 4 நாள் நடைபெற்றது அதில் இந்தியா அபாரமாக விளையாடி வெற்றிப்பெற்றது.
இந்நிலையில் பகலிரவு டெஸ்ட் நடைபெற்ற ஆமதாபாத் மைதானத்தின் ஆடுகளம் சராசரியானது என்று ஐசிசி மதிப்பீடு வழங்கியுள்ளது. இரு நாள்களில் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்த அந்த பிட்ச் குறித்து பரவலாக விமா்சனங்கள் எழுந்த நிலையில், ஐசிசி இவ்வாறு மதிப்பிட்டுள்ளது. இதனால் ஆட்டங்கள் நடத்தத் தடை விதிக்கப்படும் வாய்ப்புகளில் இருந்து அகமதாபாத் மைதானம் தப்பியுள்ளது.
ஐசிசியின் விதிகள் மற்றும் வரைமுறைகள் பிரிவில் வெளியான மதிப்பீட்டில், 3-ஆவது டெஸ்ட் நடைபெற்றபோது ஆடுகளம் சராசரியாக இருந்ததாகவும், கடைசி டெஸ்ட் நடைபெற்றபோது நல்ல முறையில் இருந்ததாகவும், முதல் டி20 ஆட்டத்தின்போது சிறப்பான முறையில் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்தியா - ஆஸ்திரேலியா தொடரின் 3-ஆவது டெஸ்ட் நடைபெற்ற சிட்னி மைதான ஆடுகளமும் சராசரியானது என்றே ஐசிசி மதிப்பீடு செய்துள்ளது.