உலகக் கோப்பையில் ’காஷ்மீருக்கு நீதி வேண்டும்’ பேனர்: ஐசிசி அதிருப்தி
இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடந்த போட்டியின் போது, ’காஷ்மீருக்கு நீதி வேண்டும்’ என்ற பேனர் விமானம் மூலம் பறக்க விடப்பட்டதை அடுத்து ஐசிசி அதிருப்தி தெரிவித்துள்ளது.
உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. கடந்த ஜூன் 29 ஆம் தேதி பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியபோது மைதானத்துக்கு மேலே, ’பலுசிஸ்தானுக்கு நீதி வேண்டும்’ என்ற பேனரை சுமந்தபடி விமானம் ஒன்று பறந்தது. இதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நேற்றும் விமானம் மூலம், பேனர் பறக்க விடப்பட்டது. லீட்ஸில் நேற்று நடந்த போட்டியில் இந்தியா- இலங் கை அணிகள் மோதின. அப்போது விமானம் ஒன்று ’காஷ்மீருக்கு நீதி வேண்டும்’ என்ற பேனரை சுமந்தபடி சென்றது.
இதற்கு ஐசிசி கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது. இதுபற்றி ஐசிசி விடுத்துள்ள அறிக்கையில், ‘’விமானத்தின் மூலம் அரசியல் பேனர்களை விடும் சம்பவம் மீண்டும் நடந்துள்ளதால் ஏமாற்றம் அடைந்துள்ளோம். உலகக் கோப்பை தொடரில் எந்த அரசியல் கோஷங்களையும் ஆதரிப்பதில்லை.
இந்த தொடர் முழுவதும் போலீஸ் உதவியுடன் இதுபோன்ற அரசியல் எதிர்ப்புகளை தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். இதற்கு முன் நடந்த சம்பவத்தின்போது மேற்கு யார்க்ஷையர் போலீசார், இனி இப்படி நடக்காது என்று உறுதியளித்திருந்தனர். ஆனால் மீண்டும் இப்படி நடந்திருப்பது அதிருப்தியை அளிக்கிறது’’ என்று தெரிவித்துள்ளது.