வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ்க்கு நிரந்தர தடை விதித்திருக்க வேண்டும் -ரமீஸ் ராஜா பாய்ச்சல்

வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ்க்கு நிரந்தர தடை விதித்திருக்க வேண்டும் -ரமீஸ் ராஜா பாய்ச்சல்
வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ்க்கு நிரந்தர தடை விதித்திருக்க வேண்டும் -ரமீஸ் ராஜா பாய்ச்சல்

முடிவெடுக்கும் அதிகாரத்தில் நான் இருந்திருந்தால் வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனிஸ் ஆகிய இருவருக்கும் நிரந்தர தடை விதித்திருப்பேன் எனக் கூறியுள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் ரமீஸ் ராஜா.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் நிறைய பேர் மேட்ச் பிக்ஸிங் என்கிற சூதாட்டத்தில் ஈடுபட்டு தண்டனை பெற்றுள்ளனர். பாகிஸ்தானில் 2000ஆம் ஆண்டில் வெளியான நீதிபதி மாலிக் கய்யாம் அறிக்கை பெரும் புயலைக் கிளப்பியது. சலீம் மாலிக், அடா உர் ரஹ்மான், வாசிம் அக்ரம், இன்சமாம் உல் ஹக், முஷ்டாக் அஹ்மது, வக்கார் யூனிஸ், அக்ரம் ராசா, சயீத் அன்வர் எனப் பல முன்னணி வீரர்கள் மீது பல்வேறு மேட்ச் பிக்ஸிங் புகார்கள் கூறப்பட்டது.

அவர்களில் சலீம் மாலிக் மற்றும் அடா உர் ரஹ்மான் ஆகிய இருவருக்கு மட்டும் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் உள்ளிட்டோருக்கு வெறும் அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது. அவர்களில் பலர் தொடர்ந்து கிரிக்கெட் ஆடியதும் குறிப்பிடத்தக்கது. நீதிபதி மாலிக் கய்யாம் அறிக்கைகையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முற்றிலும் ஏற்றுக் கொள்ளாதது பற்றியும், சூதாட்டப் புகாரில் சிக்கியவர்களுக்கு தொடர்ந்து பாகிஸ்தான் தேசிய அணியில் வாய்ப்பு கொடுத்தது பற்றியும் கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக அந்த அறிக்கையில் வாசிம் அக்ரம் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டும், அவர்மீது பெரிதாக நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் தான் வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனிஸ் ஆகிய இருவரையும் குறிவைத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியிலிருந்து அண்மையில் நீக்கப்பட்ட ரமீஸ் ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் ரமீஸ் ராஜா கூறுகையில், "சூதாட்டப் புகாரில் சிக்கிய யாருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கக் கூடாது என்று நான் நினைக்கிறேன். முடிவெடுக்கும் அதிகாரத்தில் நான் இருந்திருந்தால் வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனிஸ் ஆகிய இருவருக்கும் நிரந்தர தடை விதித்திருப்பேன். நீங்கள் அவர்களை மீண்டும் கிரிக்கெட்டுக்கு கொண்டு வந்தீர்கள். அந்த நேரத்தில் நான் பொறுப்பில் இல்லை. அவர்களுடன் (வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனிஸ்) விளையாடுங்கள், அவர்களுடன் வேலை செய்யுங்கள் என்று நிர்பந்தம் செய்தார்கள். அது எனக்கு உடன்படாத விஷயமாக இருந்தது'' என்று கூறினார்.

அதேபோல் 2010ஆம் ஆண்டு ஸ்பாட் பிக்சிங் புகாரில் தடை செய்யப்பட்ட சல்மான் பட், முகமது அமீர் மற்றும் முகமது ஆசிப் ஆகிய மூவர் குறித்தும் ரமிஸ் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். தவறு யார் செய்திருந்தாலும் அவர்கள் மீது சகிப்புத்தன்மை கட்டக்கூடாது என்று அவர் கூறினார்.





Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com