“டெத் ஓவரில் தோனியின் ஆட்டத்தை கேள்வி கேட்கவே மாட்டேன்” - ஃபிளமிங்

“டெத் ஓவரில் தோனியின் ஆட்டத்தை கேள்வி கேட்கவே மாட்டேன்” - ஃபிளமிங்
“டெத் ஓவரில் தோனியின் ஆட்டத்தை கேள்வி கேட்கவே மாட்டேன்” - ஃபிளமிங்

டெத் ஓவரில் தோனியின் ஆட்டத்தை கேள்வி கேட்க மாட்டேன் என்று பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 39வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் நேற்று விளையாடின. அந்தப் போட்டியில் சென்னை அணி பெங்களூரு அணியிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்றது. இந்தப் போட்டியின் 19-வது ஓவரை நவ்தீப் சாய்னி வீசினார். அப்போது சென்னை அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 36 ரன்கள் தேவைப்பட்டது. சென்னை அணி சார்பில் தோனி மற்றும் பிராவோ களத்தில் இருந்தனர். அந்த ஓவரில் தோனி மூன்று சிங்கிள் எடுக்கும் வாய்ப்பை மறுத்தார். தோனியின் இந்தச் செயல் பெரும் சர்ச்சையை கிளப்பியது.  

இந்நிலையில், இது குறித்து சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “நான் தோனியின் கடைசி கட்ட ஆட்டத்தின் முடிவை எப்போதுமே கேள்விக் கேட்க மாட்டேன். ஏனென்றால் ஆட்டத்தின் தன்மையை தோனி எப்போதுமே சரியாக கணிக்க கூடியவர். அத்துடன் ஆட்டத்தின் போக்கிற்கு ஏற்ப தனது ஆட்டத்தை மாற்றுவதில் தோனி மிகவும் வல்லவர். இதனால் பிராவோ இருந்தும் தோனி சிங்கிள் எடுக்கவில்லை என்றால் அதற்கு தகுந்த காரணம் அவரிடம் இருக்கும். அந்தக் காரணத்திற்கு நான் எப்போதும் துணையாக இருப்பேன். 

மேலும் சென்னை அணிக்கு தோனி பல முறை இதுபோன்ற இக்கட்டான சூழல்நிலைகளிலிருந்து போட்டியை வென்று கொடுத்துள்ளார். அதேபோல நேற்றும் அவர் அணியை வெற்றியின் விழிம்பிற்கு அழைத்து சென்றார். அத்துடன் தோனி எடுக்கவேண்டிய ரன்களும் அதற்காக மீதமுள்ள பந்துகளை எண்ணி எவ்வளவு சிக்சர் அடிக்கவேண்டும் என்பதை தீர்மானிப்பார். இதனால் தோனி இந்த ஆட்டத்திலும் 4முதல் 5 சிக்சர்கள் அடிக்கவேண்டும் என கணித்திருப்பார். அந்த கணிப்பை செயல் முறையும் படுத்தினார். எனினும் அணி வெற்றி பாதைக்குச் செல்ல இயலவில்லை என்பது மட்டும்தான் சற்று வருத்தமளிக்கிறது” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com