“ரியோவில் விட்டதை டோக்கியோவில் வெல்வேன்” - நம்பிக்கையுடன் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ்

“ரியோவில் விட்டதை டோக்கியோவில் வெல்வேன்” - நம்பிக்கையுடன் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ்
“ரியோவில் விட்டதை டோக்கியோவில் வெல்வேன்” - நம்பிக்கையுடன் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ்

இந்தியாவுக்காக எதிரிகளை இரும்பு பிடி பிடித்து டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கத்தை வென்று வர ஆவலுடன் காத்திருக்கிறார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாத். காமன்வெல்த் மற்றும் ஆசிய  விளையாட்டுகள் என இரண்டிலும் தங்கம் வென்ற இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை என்ற சிறப்புக்கு சொந்தக்காரர். 

யார் இவர்?

கடந்த 2016 இல் நடிகர் அமீர்கான் நடிப்பில் வெளிவந்த ‘தங்கல்’ திரைப்படம் அனைவருக்கும் நினைவில் இருக்கும். அதில் வரும் போகாத் சகோதரிகளின் சித்தப்பா மகள்தான் வினேஷ் போகாத். 

கடந்த 1994 இல் ஹரியானா மாநிலத்தில் பிறந்தவர். ‘பெண் பிள்ளைகளுக்கு மல்யுத்தம் எதற்கு?’ என ஊரே ஓரணியில் திரண்டு எதிர்ப்பு தெரிவித்த சூழலில் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாத மஹாவீர் சிங் போகாத் தான் இவரது பயிற்சியாளர். உறவு முறையில் அவர் வினேஷுக்கு பெரியப்பா.

ரத்தத்தில் கலந்தது மல்யுத்த விளையாட்டு! 

தனது குடும்பத்தில் அனைவரும் மல்யுத்த விளையாட்டில் தீவிரமாக ஆர்வம் செலுத்தி வந்ததை பார்த்து வளர்ந்த வினேஷுக்கு அந்த விளையாட்டின் மீது ஆர்வம் வந்துள்ளது. பால்ய பருவத்தில் பயிற்சியை தொடங்கியவர். அதன் மூலம் அவரை எதிர்த்து விளையாடியவர்களை அதிரடியாக வீழ்த்தி வெற்றி கண்டார். 

இதுவரை வென்றுள்ள டைட்டில்கள்!

ஆசிய விளையாட்டு, காமன்வெல்த், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார் வினேஷ். ப்ரீஸ்டைல் மல்யுத்த வீராங்கனையான அவர் சர்வதேச அளவிலான போட்டிகளில் 13 பதக்கங்கள் வென்றுள்ளார். 4 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் இதில் அடங்கும். 

கடந்த 2016 ரியோ ஒலிம்பிக்கில் 48 கிலோ எடைப்பிரிவில் விளையாடிய அவர் பத்தாவது இடம் பிடித்திருந்தார். காலிறுதி வரை முன்னேறிய அவருக்கு மூட்டு பகுதியில் ஏற்பட்ட காயம் அப்போது பின்னடவை கொடுத்தது. இந்த முறை 53 கிலோ எடைப் பிரிவில் ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ளார். 

நிச்சயம் பதக்கம் வெல்வேன் 

“53 கிலோ எடைப் பிரிவில் எனது நாட்டுக்காக நான் ஒலிம்பிக்கில் விளையாட உள்ளேன். ரியோவில் விட்டதை நிச்சயம் டோக்கியோவில் கைபற்றுவேன். தங்கம் வெல்வதற்கான பயிற்சிகளை சிறப்பாக  மேற்கொண்டு வருகிறேன்” என டோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெற்றதும் சொல்லியிருந்தார் வினேஷ். இப்போதைக்கு அவர் வெல்லாமல் விட்டு வைத்துள்ள ஒரே பதக்கம் அதுதான். சர்வதேச மல்யுத்த ரேங்கிங்கில் அவர் மூன்றாவது இடத்தில் தற்போது உள்ளார். 

விடாமுயற்சியின் மூலம் நிச்சயம் வினேஷ் ஒலிம்பிக் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com