இப்போதைக்கு ஓய்வில்லை அர்ஜென்டினா ஜெர்சியில் தொடர்ந்து விளையாடுவேன் - மெஸ்ஸி

இப்போதைக்கு ஓய்வில்லை அர்ஜென்டினா ஜெர்சியில் தொடர்ந்து விளையாடுவேன் - மெஸ்ஸி
இப்போதைக்கு ஓய்வில்லை அர்ஜென்டினா ஜெர்சியில் தொடர்ந்து விளையாடுவேன் - மெஸ்ஸி

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் மிகவும் சிறந்த போட்டியாக நேற்று அர்ஜென்டினா பிரான்ஸ் அணிகளுக்கு இடையோன போட்டி இருந்தது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது.

டென்ஷன்.. டென்ஷன்.. டென்ஷன்.. என உலக கால்பந்து ரசிகர்களை டென்ஷனின் உச்சிக்கே கொண்டு சென்ற போட்டி இது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என போட்டியை ரசிக்க வந்த ரசிகர்களை ஆட்டம் முடியும் வரை இருக்கையின் நுனியிலேயே அமரவைத்த போட்டியும் இதுதான்.

போட்டியின் முதல்பாதியில் தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை கடைபிடித்த அர்ஜென்டினா இரண்டு கோல்களை அடித்து முன்னிலை பெற்றது. அதில், மெஸ்ஸி ஒருகோல் அடித்ததோடு மரியா ஒருகோல் அடிக்க காரணமாகவும் இருந்தார். முதல்பாதி ஆட்டத்தின் முடிவில் அர்ஜென்டினா 2:0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்த நிலையில், ஏம்பா பிரான்ஸ் அவ்வளவுதான என கேட்டவரிடம்.. இருப்பா இப்பதான் வாம்அப் ஆகியிருக்கு செகண்ட் ஆப்ல பாருப்பா என ரசிகர்கள் பேசியதை பார்க்க முடிந்தது.

அதேபோலவே இரண்டாவது பாதி ஆட்டத்தில் அனல்பறக்கத் தொடங்கியது. அமைதியாக இருந்த பிரான்ஸ் ரசிகர்கள் ஆர்ப்பரித்து தங்களது அணிக்கு ஆதரவை தெரிவித்தனர். இதையடுத்து இரண்டாவது பாதி ஆட்டத்தின் 80 மற்றும் 81-வது நிமிடங்களில் அந்த அணியின் நட்சத்திர வீரர் எம்பாப்ஃபே இரண்டு கோல்களை அடித்து போட்டியை சமன் செய்தார். அடடா... மெஸ்ஸியின் கனவு தகர்ந்து விடுமோ என ரசிகர்கள் சோகத்தில் இருந்த நிலையில் கூடுதல் நேர ஆட்டத்தின் 108-வது நிமிடத்தில் மெஸ்ஸி மேலும் ஒருகோல் அடித்து தனது அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

ஆனால் இந்த சந்தோஷம் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. கூடுதல் நேர ஆட்டத்தில் 118-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் எம்பாப்ஃபே தனது அணிக்கு கிடைத்த பெனல்டி வாய்ப்பை பயன்படுத்தி மேலும் ஒருகோல் அடித்து போட்டியை சமன் செய்தார். இதையடுத்து அர்ஜென்டினா ரசிகர்களின் முகத்தில் சோகம் அப்பிக் கொண்டது. போட்டியின் இறுதிவரை யாரும் கோல் அடிக்காத நிலையில் போட்டி சமனில் முடிந்தது. இதையடுத்து டைபிரேக்கர் முறை பின்பற்றப்பட்டது.

இதில் அர்ஜென்டினா அணி 4:2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வென்றதை அடுத்து மெஸ்ஸியின் கைகளை தழுவிய உலகக் கோப்பையை முத்தமிட்டு மகிழ்ந்தார். இதன் மூலம் 36 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பையை கைப்பற்றி மூன்று முறை உலகக் கோப்பையை வென்ற அணி என்ற பெருமையை பெற்றுள்ளது.

இந்நிலையில், கத்தார் கால்பந்து தொடரில் அபாரமாக விளையாடிய மெஸ்ஸிக்கு சிறந்த வீரருக்கான தங்க பந்து விருது வழங்கப்பட்டது. அதேபோல் இந்த தொடரில் அதிக கோல் அடித்த பிரான்ஸ் வீரர் எம்பாப்ஃபே-க்கு தங்க காலணியும், சிறந்த கோல்கீப்பராக தேர்ந்தெடுக்கப்பட்ட மார்ட்டினெஸ் தங்க கையுறையை பெற்றார். அதேபோல் சிறந்த இளம் வீரருக்கான விருதை அர்ஜென்டினா அணியின் இளம் வீரர் என்சோ பொர்னாண்டஸ் பெற்றார்.

இந்நிலையில், இந்த உலகக் கோப்பை கால்பந்து தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த மெஸ்ஸி, கால்பந்து போட்டிகளில் இருந்து நான் ஓய்வு பெறப் போவதில்லை. சாம்பியன் என்ற பெருமையுடன் அர்ஜென்டினா ஜெர்சியில் தொடர்ந்து விளையாடுவேன் என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com