'107 கிலோ எடையை குறைக்க கடினமாக உழைத்தேன்' - வாட்டர்பாய் to வீரர்.. தீக்‌ஷனாவின் கதை!

'107 கிலோ எடையை குறைக்க கடினமாக உழைத்தேன்' - வாட்டர்பாய் to வீரர்.. தீக்‌ஷனாவின் கதை!
'107 கிலோ எடையை குறைக்க கடினமாக உழைத்தேன்' - வாட்டர்பாய் to வீரர்.. தீக்‌ஷனாவின் கதை!

சென்னை சூப்பர் கிங்ஸ் சுழற்பந்துவீச்சாளர் மகேஷ் தீக்‌ஷனா, “107 கிலோ எடையில் இருந்தேன். சென்னை அணி என்னை ஏலத்தில் எடுக்கும் என நினைக்கவில்லை. தோற்றால் மீண்டும் தண்ணீர் பாட்டில்களை சுமக்க வேண்டியிருக்கும் என்பது தெரியும்” என்று கூறியுள்ளார்.

ஐபிஎல் 2022 சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. இருப்பினும் இந்த சீசனில் சென்னை அணிக்கு நடந்த சில நல்ல விஷயங்களில் ஒன்று சுழற்பந்துவீச்சில் ஜொலித்த மகேஷ் தீக்‌ஷனாவின் ஆட்டம். 22 வயதான அவர், தனது முதல் ஐபிஎல் சீசனில் விளையாடி, இதுவரை 8 போட்டிகளில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சென்னை அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் டுவைன் பிராவோ (16), முகேஷ் சவுத்ரி (13) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார்.

இருப்பினும், தீக்‌ஷனாவுக்கு இந்த இடம் அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியிட்ட வீடியோவில், தீக்‌ஷனா தனது உடல் எடையுடன் போராடுவது மற்றும் அதை எவ்வாறு சமாளித்தார் என்பது பற்றி பேசுகிறார். “அண்டர் 19 அணியில் விளையாடும் போது நான் 107 கிலோவாக இருந்தேன். அதனால் யோ-யோ டெஸ்டில் எனது எடை மற்றும் தோல் மடிப்பைக் குறைக்க நான் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. 2020 இல் நான் எல்லாவற்றையும் குறைத்து, எனது உடற்தகுதியைக் கொண்டு வந்தேன். தேவைக்கு அதிகமாக கடினமான வேலைகளைச் செய்ய ஆரம்பித்தேன்” என்று தீக்ஷனா வீடியோவில் கூறினார்.

“2021 இல், நான் எனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தினேன். பிறகு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. என் ஆட்டத்தை அஜந்தா மெண்டிஸ் கவனித்தார். அவர் கடந்த இரண்டு-மூன்று ஆண்டுகளாக எனது பயிற்சியாளராக இருந்தார். 2020 இல் நான் அஜந்தாவுடன் நிறைய பேசி இருக்கிறேன். நான் கடந்த ஆண்டு சென்னை அணியின் நெட் பவுலராக இருந்தேன். அவர்கள் எனக்காக ஏலம் எடுப்பார்கள் அல்லது இந்த ஆண்டு என்னைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று ஒருபோதும் நினைத்ததில்லை.

2017-18 இல், நான் U-19 அணியில் இருந்தேன், ஆனால் நான் ஒரு சில முறை உடற்தகுதி சோதனையில் தோல்வியடைந்ததால் எனக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 2019 இல் 10 ஆட்டங்களுக்கு நான் வாட்டர் பாய் ஆக வேண்டியிருந்தது. அதனால் நான் களமிறங்கும் போட்டியில் தோல்வியுற்றால், நான் தண்ணீர் பாட்டில்களை மீண்டும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியும், ஆனால் நான் என்னை நம்பினேன். ஒருபோதும் விட்டுக் கொடுக்கக்கூடாது என்ற மனப்பான்மையை வைத்திருந்தேன். அதனால்தான் நான் 2022 இல் இங்கு இருக்கிறேன்” என்று கூறினார் மகேஷ் தீக்‌ஷனா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com