"நான் டெஸ்ட் போட்டிக்காகவே உருவாக்கப்பட்டிருந்தேன்" ராகுல் டிராவிட் ஓபன் டாக் !

"நான் டெஸ்ட் போட்டிக்காகவே உருவாக்கப்பட்டிருந்தேன்" ராகுல் டிராவிட் ஓபன் டாக் !
"நான் டெஸ்ட் போட்டிக்காகவே உருவாக்கப்பட்டிருந்தேன்" ராகுல் டிராவிட் ஓபன் டாக் !

சிறு வயதிலிருந்தே எனக்கு டெஸ்ட் போட்டிகளுக்கு விளையாடும் வகையிலேயே பயிற்சி கொடுக்கப்பட்டது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் மனம் திறந்து பேசியுள்ளார்.

ஹிந்துஸ்டான் டைம்ஸ் நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள ராகுல் டிராவிட் " என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் கடுமையான காலக் கட்டங்கள் இருந்திருக்கிறது. 1998 ஆம் ஆண்டு ஒருநாள் அணியிலிருந்து நீக்கப்பட்டேன். நான் மீண்டும் ஒருநாள் அணிக்குள் நுழைய கடுமையாக போராட வேண்டியிருந்தது. ஏறக்குறைய ஓராண்டுகாலம் நான் இந்திய ஒருநாள் அணியில் இல்லை. அப்போது எனக்குள் நானே ஒருநாள் போட்டிகளுக்கு நான் ஏற்றவனா என்ற கேள்வி எழும்" என்றார்.

மேலும் தொடர்ந்த டிராவிட், "நான் எப்போதும் டெஸ்ட் வீரராகவே இருக்க ஆசைப்பட்டேன். எனக்கு பயிற்சியும் டெஸ்ட் போட்டிகளை விளையாடுவதற்கு ஏற்பவே கொடுக்கப்பட்டது. பந்தை தூக்கி அடிக்கக் கூடாது, தரையோடு தரையாகத்தான் விளையாட வேண்டும் என்று எனக்கு போதிக்கப்பட்டது. அதனால் ஒருநாள் போட்டியில் என்னால் பந்தை தூக்கி அடிக்க முடியுமா அந்தத் திறன் என்னிடம் இருக்கிறதா என்ற கேள்விகள் என்னுள் எழுந்துக்கொண்டே இருந்தது" என்றார்.

தன்னுடைய இளம் வயது குறித்துப் பேசிய டிராவிட் "சிறுவயதிலிருந்தே நான் பாதுகாப்பற்றவனாய் பல கட்டங்களாக என் வாழ்க்கை சென்றது. இந்தியாவில் கிரிக்கெட் வீரராக உருவாகுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. நான் கிரிக்கெட் விளையாட தொடங்கிய காலக்கட்டத்தில் ஐபிஎல் இல்லை, வெறும் ரஞ்சிப் போட்டிகள் மட்டும்தான். அதிலும் ரஞ்சிப் போட்டிகள் மூலம் பெரிதாக வருமானம் கிடைப்பதில்லை. நான் படிப்பிலும் மோசமில்லை. நான் நினைத்திருந்தால் அப்போது எம்.பி.ஏ. படித்திருக்கலாம். ஆனால் கிரிக்கெட்தான் என்னுடைய வாழ்க்கை என முடிவெடுத்தேன்" என்றார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com