தோனி, பிராவோவின் கிரிக்கெட் அறிவு: இங்கிலாந்து வீரர் ஆசை
ஐபிஎல் போட்டியின்போது தோனி மற்றும் ஆல் ரவுண்டர் பிராவோவிடம் இருந்து கற்றுக்கொள்ள விரும்புவதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட இருக்கும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க்வுட் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறும்போது, ’ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவதை கவுரவமாக கருதுகிறேன். அணியின் கேப்டன் தோனி, கிரிக்கெட் பற்றி அதிகமான அறிவு கொண்டவர். நெருக்கடியான சூழ்நிலையை வெற்றிகரமாக சமாளிப்பது எப்படி என்பதில் கைதேர்ந்தவர். அவரிடம் இருந்து நெருக்கடியை சமாளித்து வெற்றிகரமான வீரராக செயல்படுவது எப்படி என்பதை கற்றுக்கொள்ள விரும்புகிறேன். அதற்கு இந்த போட்டி தொடர் உதவியாக இருக்கும்.
சென்னை அணியில் ஆல்-ரவுண்டர் வெய்ன் பிராவோ உள்ளார். அவரும் கிரிக்கெட் பற்றி அதிகம் தெரிந்து வைத்திருப்பவர். அவரிடம் இருந்து ‘ஸ்லோ-பால்’ பந்து வீச்சுக் கலையை கற்றுக்கொள்ள இருக்கிறேன். ஐபிஎல் போட்டியில் விளையாடுவதை பெருமையாக கருதுகிறேன். அதுமட்டுமின்றி சிறந்த அணிக்காக விளையாடுகிறேன் என்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்றார்.