என் திறமை மீது நம்பிக்கை இருக்கிறது: வாஷிங்டன் உறுதி!
என் திறமை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று இந்திய கிரிக்கெட் அணியின் இடம்பெற்றுள்ள தமிழக இளம் கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறும்போது, ‘கடந்த ஐபிஎல் போட்டியில் நான் அறிமுகமானேன். அப்போது எனக்கு இருந்த அழுத்தமும் எதிர்பார்ப்பும் வேறுவிதமானது. இப்போது ஐபிஎல் அணிகளுக்கு என் மீது எதிர்பார்ப்பு இருக்கிறது. என் மீது நான் அதிக நம்பிக்கை வைத்துள்ளேன். ஒரு கிரிக்கெட் வீரராக, கடந்த ஐபிஎல் போட்டியில் எப்படி இருந்தேனோ அதை விட இரண்டு மடங்கு இப்போது முன்னேறி இருக்கிறேன். இதுவரை நடந்த போட்டிகளில் பவுலிங்கில்தான் என்னை அதிகம் அறிந்திருக்கிறார்கள். என் பேட்டிங் திறமை மீதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நேரம் வரும்போது, அதையும் நிரூபிப்பேன். இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண், எனக்கு ஆலோசனைகளை சொல்லியிருக்கிறார். மனதைரியத்தை அவர் கொடுத்துள்ளார். அது பயனுள்ளதாக இருக்கிறது’ என்றார்.