’நான் வேணா ஓய்வு பெறட்டுமா?’ மேத்யூஸ் விரக்தி!
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற தயாராகவே இருக்கிறேன் என்று இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ள கேப்டன் மேத்யூஸ் விரக்தியடைந்து கேட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி, கடந்த சில வருடங்களாக மோசமான தோல்விகளை சந்தித்து வருகிறது. கடந்த வருடத்தில் மட்டும் மூன்று முறை, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர்களில் படுதோல்வி அடைந்துள்ளது. இதையடுத்து அந்த அணியின் கேப்டன்கள் அடிக்கடி மாற்றப்பட்டு வருகின்றனர். தொடர் தோல்வி காரணமாக கேப்டாக இருந்த மேத்யூஸ் பதவி விலகினார்.
இதனால், இந்திய- இலங்கை மோதிய ஒரு நாள் போட்டித் தொடருக்கு ஆல்ரவுண்டர் திசாரா பெரேரா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இருந்தும் அந்த அணி படுதோல்வி அடைந்தது. பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பாகிஸ்தானுடன் நடந்த டெஸ்ட் தொடரை வென்ற அந்த அணி, ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் பரிதாபமாகத் தோற்றது. இந்தியாவில் நடந்த தொடரிலும் தோல்வியை தழுவியது. இதையடுத்து ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் திசாரா பெரேரா நீக்கப்பட்டார்.
Read Also -> உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
இதையடுத்து கேப்டன் பொறுப்பை விட்டு விலகிய மேத்யூஸை மீண்டும் கேப்டனாக நியமித்தனர். இதுபற்றி அப்போது மேத்யூஸ் கூறும்போது, ‘இலங் கை கிரிக்கெட் வாரிய தலைவரும் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ஹதுருசிங்காவும் பேசினர். என் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். அதனால் கேப்டன் பொறுப்பை மீண்டும் ஏற்றுக்கொண்டேன்’ என்று கூறியிருந்தார். இவர் தலைமையிலும் இலங்கை அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தது. சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பைத் தொடரில் லீக் போட்டியிலேயே அந்த அணி வெளியேறியது. இதையடுத்து கேப்டன் பொறுப்பில் இருந்து மேத்யூஸ் நீக்கப்பட்டு சண்டிமால் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தனது ராஜினாமா குறித்து வருத்தத்துடன் மேத்யூஸ் இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
அதில், ‘இலங்கை அணியின் தோல்வியால் ஏற்பட்டுள்ள பழியை ஏற்க நான் தயார். அதே நேரத்தில் என் மீது மட்டும் பழியை சுமத்துவதில் நியாயம் இல்லை. தேர்வாளர்கள் மற்றும் பயிற்சியாளரிடம் ஆலோசித்துதான் அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டன. ஆனால் என்னை மட்டும் பலிகடாவாக்கி இருக்கின்றனர். இலங்கை அணிக்கு ஒருபோதும் பாரமாக இருக்க விரும்பியது இல்லை. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட நான் தகுதியற்றவன் என்று நிர்வாகம் கருதினால் அதில் இருந்து ஓய்வு பெற தயாராகவே இருக்கிறேன். ஜூலை 2017-ல் அனைத்து வடிவங்களிலிருந்தும் கேப்டன் பதவியைத் துறந்தேன்.
தலைமைப் பயிற்சியாளர் ஹதுரசிங்க என்னை சந்தித்து உலகக்கோப்பை வரை கேப்டன் பதவியை ஏற்கச் சொன்னார். அவர் மீது கொண்ட நம்பிக்கையால் மீண்டும் கேப்டன் பதவியை ஏற்க சம்மதித்தேன். நான் ஆட்டத்தை மனசாட்சிபடி ஆடி வந்திருக்கிறேன். தென்னாப்பிரிக்கா வுக்கு எதிரான தொடரில் நான்தான் அதிக ரன்களை எடுத்திருந்தேன் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். இந்நிலையில், இலங்கை அணியின் கேப்டன் பதவியில் இருந்து தேர்வுக்குழு, பயிற்சியாளாரின் விருப்பத்திற்கேற்ப விலகுகிறேன் ’ என்று கூறியுள்ளார்.