“இந்தியாவிலிருந்து விமானம் ஏறுவதற்குள் வெல்வோம்?” - ஸ்டொய்னிஸ்
இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு விமானம் ஏறுவதற்குள் வெற்றி பெறுவோம் என ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியை இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அன்றைய தினம் ஆஸ்திரேலியா தோற்றாலும், அந்த அணியின் ஆல்ரவுண்டர் ஸ்டொய்னிஸ் வெற்றிக்காக போராடி அரை சதம் அடித்தார். 49வது ஓவர் வரை போராடிய அவர், பின்னர் அவுட் ஆகி சென்றார்.
இந்நிலையில் போட்டியின் அனுபவங்களை பகிர்ந்துகொண்ட ஸ்டொய்னிஸ், “ஆட்டம் முடியும் நேரத்தில் இனி ஒன்றுமில்லை என்ற எண்ணம் தோன்றியது. நாங்கள் சிறப்பாக விளையாடி, கடுமையாக மோதினோம். ஆனால் நாங்கள் நினைத்த வெற்றியை பெற முடியவில்லை. ஆனால், இந்தியாவிலிருந்து விமானம் ஏறுவதற்கு முன் வெல்வோம் என நினைக்கிறேன்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “எங்கள் திட்டம் கடைசி நேரத்தில் மாறியது. 46வது ஓவரிலேயே பும்ரா பந்துவீச வருவார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. மற்ற பவுலர்கள் யாராவது பந்துவீசுவார்கள் எனவே நினைத்திருந்தோம். பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியபோது, மற்றொரு விக்கெட்டை இழந்தால் நாங்கள் தோற்றுவிடுவோம் என நினைத்தோம். அதனால் விக்கெட்டை பறிகொடுக்காமல் விளையாட முயற்சித்தேன். ஆனால், அடுத்த விக்கெட்டை இழந்தோம். கோலியும், தோனியும் முற்றிலும் வேறுபட்டவர்கள். ஆனால் இருவரும் அணிக்காக இணைந்து தங்கள் பணிகளை சிறப்பாக செய்கின்றனர்” என்று கூறினார்.