நல்ல பார்ட்னர்ஷிப் அமையாததால் தோல்வி அடைந்தோம் என்று தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் டி20 கேப்டன் ஜே.பி.டுமினி கூறினார்.
ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி, 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் சேர்த்தது. தவான் 72 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அந்த அணியில் ஹென்ரிக்ஸ் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்திய அணியில் புவனேஸ்வர்குமார் 5 விக்கெட்கள் எடுத்து அசத்தினார். அவருக்கு மேன் ஆப் த மேட்ச் விருது வழங்கப்பட்டது.
இதுபற்றி புவனேஷ்வர்குமார் கூறும்போது, ’டி20 போட்டியில் 5 விக்கெட் எடுத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. சரியான ஏரியாவில் பந்துவீசி விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்று நினைத்தேன். அதன்படி வீசினேன். விக்கெட்டுகள் விழுந்தது. ஆட்டத்தின் முதலிலும் கடைசியிலும் ரசித்து பந்துவீசுகிறேன். இதுபோன்ற கடினமான சூழலில் பந்துவீசுவது எனக்குப் பிடிக்கும்’ என்றார்.
தோல்வி பற்றி தென்னாப்பிரிக்க கேப்டன் டுமினி கூறும்போது, ‘இந்த தோல்வி ஏமாற்றம் அளிக்கிறது. முதல் ஆறு ஓவரில் விக்கெட் விழும் என்று நினைத்தோம். ஆனால், இந்திய வீரர்கள், பவுண்டரிகளாக விளாசினார்கள். பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. ஆனால், எங்களுக்கு சிறந்த பார்ட்னர்ஷிப் அமையவில்லை. எங்கள் திட்டம் சிறப்பாக அமைந்ததில் மகிழ்ச்சியாக இருந்தாலும் அதை சரியாகச் செயல்படுத்தவில்லை. சில புதிய வீரர்கள் அணிக்குள் வந்திருக்கிறார்கள். அவர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். அவர்களை குறை சொல்ல முடியாது. ஆனால், சீனியர் வீரர்கள் சரியாக விளையாடவில்லை. நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்திருந்தால் போட்டி மாறியிருக்கும்’ என்றார்.