"நான் இன்னும் கேப்டனாகதான் இருக்கிறேன்" - வாழ்நாள் தடை விதிக்கப்பட்டிருந்த வார்னர் பேச்சு!

"நான் இன்னும் கேப்டனாகதான் இருக்கிறேன்" - வாழ்நாள் தடை விதிக்கப்பட்டிருந்த வார்னர் பேச்சு!
"நான் இன்னும் கேப்டனாகதான் இருக்கிறேன்" - வாழ்நாள் தடை விதிக்கப்பட்டிருந்த வார்னர் பேச்சு!

கேப்டனாக செயல்பட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தால் வாழ்நாள் தடைவிதிக்கப்பட்டிருக்கும் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், தான் இன்னும் அணிக்குள் கேப்டனாகதான் இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

2018 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய சம்பவத்தில் தொடர்புடைய மூன்று வீரர்களில் டேவிட் வார்னரும் ஒருவர். அந்த சர்ச்சை சம்பவத்திற்கு பிறகு டேவிட் வார்னருக்கு கேப்டன் பதவியில் இருக்க வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவின் பெரிய லீக் போட்டி தொடரான பிக்பேஸ் லீக் 2022-23 பிபிஎல் சீசனுக்காக விளையாட சிட்னி தண்டர் நிறுவனத்துடன் இரண்டு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் டேவிட் வார்னர். மேலும் ஜனவரி மாதம் நடக்கவிருக்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு பிக்பேஸ் லீக் தொடரில் ஐந்து போட்டிகளில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிட்னி தண்டர் அணிக்கு நீண்ட கால கேப்டனாக இருந்த உஸ்மான் கவாஜா பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு மாறிய பிறகு 2022-23 சீசனுக்கான புதிய கேப்டனை தண்டர் அணி இன்னும் நியமிக்காததால், வார்னர் கேப்டனாக பதவி வகிக்க வாழ்நாள் தடையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்நிலையில் 2018 சர்ச்சை சம்பவம் குறித்து தான் நேர்மையாக உரையாட விரும்புவதாகவும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் கதவுகள் கடைசி வரை திறக்கப்படவே இல்லை என்றும் வார்னர் தெரிவித்திருக்கிறார். மேலும் ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டன் பாட் கம்மின்ஸ் டேவிட் வார்னருக்கு ஆதரவாக` ஏன் அவர் இருக்க கூடாது, அவர் ஒரு சிறந்த லீடர், நான் நம்புகிறேன்` என்று முன்னர் பேசி இருந்தார்.

இதில் கவனிக்கப்படவேண்டிய விசயம் என்னவென்றால், பந்தை சேதப்படுத்திய அந்த போட்டியில் கேப்டனாக இருந்த ஸ்மித்திற்கு இரண்டு வருடங்கள் மட்டும் தான் கேப்டனாக இருக்க தடை விதிக்கப்பட்டது. கொரோனா காலத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த இரண்டாவது போட்டியில் காயம் காரணமாக பேட் கம்மின்ஸ் வெளியேறிய போது ஸ்மித் கேப்டனாக ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தினார்.

இந்நிலையில் பிக்பேஸ் லீக்கிலாவது டேவிட் வார்னர் கேப்டனாக இருக்க அனுமதிக்க வேண்டும் கோரிக்கை அதிகமாக எழுந்துள்ளது. இதுகுறித்து பேசி இருக்கும் டேவிட் வார்னர், `` நான் இன்னும் அணிக்குள் கேப்டனாக தான் இருக்கிறேன், கேப்டன் என்னும் பெயர் மட்டும் தான் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் ஒரு அணியை வழிநடத்தும் அனுபவம் தனக்கு கிடைத்திருப்பதாகவும், இளம் வீரர்களுக்கு வழிகாட்டுவதில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும்`` தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com