நானும் மனுஷன்தான், தவறுகள் சகஜம்: பங்களாதேஷ் கேப்டன் சோகம்!
நானும் மனிதன் தான், தவறுகள் நடப்பது சகஜம் என்று பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் கேப்டன் முஷிபுர் ரஹிம் கூறினார்.
தென்னாப்பிரிக்க அணியுடன் நடந்த டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்குப் பிறகு பேசிய பங்களாதேஷ் அணியின் கேப்டன், முஷிபுர் ரஹிம், ‘தோல்வி அடைந்தால் கேப்டனைதான் குறைசொல்வார்கள். இப்போதும் என்னை குறை சொல்கிறார்கள். இது வாடிக்கைதான். இந்த தோல்வியை அடுத்து, கேப்டன் பதவியில் இருந்து விலகுவீர்களா என்கிறார்கள். அதை பங்களாதேஷ் கிரிக்கெட் போர்டுதான் முடிவு செய்ய வேண்டும். கேப்டனாக தொடர்வதை பற்றி நான் முடிவு செய்ய முடியாது.
தென்னாப்பிரிக்கா உடனான இரண்டு டெஸ்ட் போட்டியிலும் டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தேன். ஒருவேளை நான் அணியை சரியாக வழிநடத்தாமல் இருக்கலாம். அதனால்தான் அணி தோல்வியை சந்தித்திருக்கலாம். நானும் மனிதன் தான். தவறுகள் நடப்பது சகஜம். எனது தவறுகளை திருத்திக்கொள்ள வாய்ப்புகள் கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன். நாங்கள் அனைவரும் 100 சதவிகிதம் கடினமாக உழைத்தோம். ஆனால் சில நேரங்களில் தோல்வி தவிர்க்க முடியாததாகிவிடுகிறது’ என்றார்.

