"தோனியின் அறிவுரையை நிராகரித்தேன்" - ரோகித் சர்மாவின் நினைவலைகள் !
முதல்முறையாக ஒருநாள் போட்டியில் 200 ரன்கள் அடிக்கும்போது களத்தில் தோனி சொன்ன அறிவுரையை நிராகரித்தேன் என்று இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா முதல் முறையாக இரட்டைச் சதமடித்தார். அதன் பிறகு அவர் ஒருநாள் போட்டிகளில் மேலும் இரண்டு இரட்டைச் சதம் விளாசியுள்ளார். உலகில் வேறு எந்த நாட்டு வீரரும் இத்தகைய சாதனையை இதுவரை புரியவில்லை. இந்நிலையில் தன்னுடைய முதல் இரட்டைச் சத நினைவுகளை இந்தியச் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வினுடன் இன்ஸ்டா உரையாடலின்போது பகிர்ந்துகொண்டார்.
அப்போது அவர் "நான் அன்றையப் போட்டியில் இரட்டைச் சதம் அடிப்பேன் என நினைக்கவில்லை. அந்தப் போட்டியில் ஷிகர் தவான், விராட் கோலி, யுவராஜ் சிங் ஆகியோர் விரைவாக ஆட்டமிழந்தனர். பின்பு தொடக்க வீரரான நானும் சுரேஷ் ரெய்னாவும் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தோம். ரெய்னா ஆட்டமிழந்ததும் தோனி களத்துக்கு வந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி ரன்களைச் சேர்த்தோம். ஆனால் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன்" என்றார்.
மேலும் பேசிய ரோகித் சர்மா "அப்போது தோனி என்னிடம் அடிக்கடி வந்து, நீ ஆரம்பத்திலிருந்து களத்தில் இருக்கிறாய் கடைசி வரை நீ இருக்க வேண்டும். உன்னால் இப்போது எந்தப் பந்தையும் விளாச முடியும். ஆனால் நீ நிலைத்து ஆட வேண்டும். அதனால் பந்தை விளாசும் பொறுப்பை நான் பார்த்துக் கொள்கிறேன், நீ பொறுமையாகவே விளையாடு. கிடைக்கின்ற இடைவெளியில் பவுண்டரி விளாசு" என்றார்.
மேலும் தொடர்ந்த ரோகித் "ஆனால் நான் அவர் சொல்வதைக் கேட்கவில்லை. கிடைக்கின்ற பந்துகளை எல்லாம் சிக்ஸரும், பவுண்டரிகளுமாக விளாசினேன்" என்றார். ஆனால் அந்தப் போட்டியில் 158 பந்துகளில் 208 ரன்களை குவித்த ரோகித் சர்மா , தோனி சொல்வது போல இறுதி வரை விளையாடவில்லை 49.3 ஆவது ஓவரில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.