மெஸ்ஸியை தெரியும்! களத்திற்கு வெளியே அசத்தும் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி தெரியுமா?

மெஸ்ஸியை தெரியும்! களத்திற்கு வெளியே அசத்தும் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி தெரியுமா?
மெஸ்ஸியை தெரியும்! களத்திற்கு வெளியே அசத்தும் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி தெரியுமா?

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பல நட்சத்திர வீரர்கள் இருந்தாலும் அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக இருப்பது அந்த அணியின் பயிற்சியாளர் என்றால் அது மிகையில்லை.

கால்பந்து விளையாட்டில் உலகின் உச்சபட்ச நட்சத்திரங்களாக ஜெலிக்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர், மெஸ்ஸி, எம்பாஃப்பே, போன்றவர்களை சிறந்த வீரர்களாக சொல்லிவிடலாம். இவர்களை பட்டைதீட்டி, மெருகேற்றி, பக்குவப்படுத்தி உலக அளவில் சிறந்த விளையாட்டு வீரர்களாக வலம்வர காரணமான பயிற்றுநர்களை நாம் நினைத்துப் பார்ப்பதே இல்லை. பயிற்றுநர்கள் இன்றி சிறந்த அணியும் இல்லை. சிறந்த வீரரும் இல்லை என்றே சொல்லலாம்.

ஓவ்வொரு வீரரின் நிறை குறைகளை கண்டறிந்து. அதை சரி செய்து உலக கால்பந்து ரசிகர்களின் மனதில் நட்சத்திரமாக ஜெலிக்கும் வீரர்களை உருவாக்கும் பயிற்றுநர்கள் குறித்து இங்கு பார்க்கலாம்....

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஒரு நாட்டின் அணிக்காக விளையாடும் வீரர்களை தேர்ந்தெடுத்து அந்த வீரர்களுக்கு சிறப்பான பயிற்சியளித்து கோப்பையை வெல்லும் வரை கால்பந்து பயிற்றுநரின் பொறுப்பு மிகவும் பெரியது. ஒரு அணி களத்தில் விளையாடும் போது, வீரர்களின் ரியாக்ஷன் வெளியே தெரியாது, ஆனால், அந்த அணியின் வெற்றிக்காக பயிற்றுநர் படும்பாடு சொல்லிமாலாது.\

பேக் ஃபயர் ஆன போர்ச்சுகர் பயிற்சியாளரின் யுக்தி!

அணியின் வீரர்களும் பயிற்றுனரும் ஒருவரை ஒருவர் புரிந்து விட்டுக்கொடுத்து களம்கண்டால் மட்டுமே வெற்றிபெற ஏதுவாக இருப்பதோடு அணியின் வீரரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். இதற்கு போர்ச்சுக்கல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டேவுக்கும் அந்த அணியின் பயிற்றுநருக்கும் இடையேயான கருத்து வேறுபாட்டை உதாரணமாக சொல்லலாம்.

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுக்கல் சுவிட்சர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் போர்ச்சுக்கல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை ஆடும் அணியில் இறக்காமல் பெஞ்சில் அமரவைத்தார் அந்த அணியின் பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டோஸ். ஆனால் அந்த போட்டியில் வெற்றிபெற்ற போர்ச்சுக்கல் அணி காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

அதேபோல் மிகவும் முக்கியமாக காலிறுதிப் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடுவார் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிலையில், ஆட்டத்தின் முதல் பாதியில் அவர் பெஞ்சில் அமரவைக்கப்பட்டார். மோராக்கோ அணியுடனான இந்த போட்டியின் இரண்டாவது பாதியில் களமிறக்கப்பட்ட அவரால் அணிக்கு வெற்றியைத் தேடித்தர முடியவில்லை. இறுதியில் 1:0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல் அணி தோல்வியை தழுவியதோடு தொடரில் இருந்து வெளியேறி ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்தது.

ரொனால்டோவை முதல் பாதியில் களம் இறக்காததே அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என ரசிகர்கள் சரமாரி குற்றம் சாட்டினர். ரொனால்டோ முதல் பாதியிலேயே இறங்கியிருந்தால் நிச்சயம் ஏதாவது மேஜிக் செய்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றிருப்பார். இதற்கு தடையாக இருந்தது ஆந்த அணியின் பயிற்றுனர் பெர்னாண்டோ சாண்டோஸ் தான் என்று ரசிகர்கள் வருத்தத்துடன் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அசத்தும் அர்ஜெண்டினா பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி!

பயிற்றுநரின் செயல்பாடு என்று பேசும்போது கட்டாயமாக அர்ஜென்டினா அணியின் பயிற்றுநர் லியோனல் ஸ்கலோனி பற்றி பேசியே ஆக வேண்டும், அணியில் அனைத்து வீரர்களுடன் ஒன்றிணைந்து ஏன் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியுடன் இணைந்து அர்ஜென்டினா அணியை இறுதி போட்டிக்கு அழைத்துச் சென்ற பெருமை லியோனல் ஸ்கலோனிக்கு உண்டு என்றால் அது மிகையில்லை.

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இளம் பயிற்சியாளராக இருப்பவர் லியோனல் ஸ்கலோனி. 44 வயதான இவருக்கு போதிய அனுபவம் இல்லாவிட்டாலும் சிறந்த பயிற்சியாளராகவே கால்பந்து வல்லுநர்களால் கருதப்படுகிறார். இந்த தொடரின் தொடக்கப் போட்டியில் தோல்வியடைந்தாலும், இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருப்பது. பயிற்றுனரின் திறமையையே காட்டுகிறது.

2019 ஆம் ஆண்டு கோபா அமெரிக்கா கால்பந்து போட்டிக்கு முன்னதாக அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட இவர், அந்த தொடரில் சிலி அணிக்கு எதிரான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற அணியை மூன்றாவது இடத்திற்கு அழைத்துச் சென்றார். இதையடுத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இறுதிப் போட்டியில் பிரேசில் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அர்ஜென்டினா அணி, கோபா அமெரிக்கா பட்டத்தை வெல்ல ஸ்கலோனி காரணமாக இருந்தார்.

லியோனல் ஸ்கலோனி பயிற்சியாலும், மெஸ்ஸியின் மேஜிக் ஆட்டத்தாலும் கத்தார் உலகக் கோப்பை வென்று அர்ஜென்டினா அணி மீண்டும் சாதனை படைக்குமா என்பது இன்று நடைபெறும் பிரான்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தெரிந்துவிடும். காத்திருப்போம் போட்டியை காண.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com