இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 3-வது டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீபன் ஸ்மித் இரட்டை சதம் அடித்தார். அவர் 239 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த இன்னிங்சில் அவர் 112 ரன்களை எட்டிய போது, இந்த ஆண்டில் டெஸ்ட் போட்டியில் 1,000 ரன்களை கடந்தார். இதன் மூலம் தொடர்ச்சியாக 4 ஆண்டுகள் டெஸ்ட் போட்டியில் 1,000 ரன்களுக்கு மேல் சேர்த்த 2-வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். மேத்யூ ஹைடன் தொடர்ந்து 5 ஆண்டுகளில் இவ்வாறு ஆயிரம் ரன்களை கடந்திருக்கிறார்.
இதுபற்றி ஸ்மித் கூறும்போது, ’நேற்று தேநீர் இடைவேளையின் போது உண்மையிலேயே சோர்வடைந்துவிட்டேன். பேட்டிங் செய்யும்போதும் கொஞ்சம் தடுமாறினேன். வழக்கமாக பேட்டிங் செய்யும்போது நான் அதிகமாக சாப்பிட மாட்டேன். ஆனால், சோர்வு காரணமாக வாழைப்பழம், கொஞ்சம் இனிப்பு சாப்பிட்டப் பிறகு தெம்பானேன். இதையும் பயிற்சியாளர் கெல்லி சொன்னதால்தான் சாப்பிட்டேன். இந்த டெஸ்ட் போட்டியில் ரசித்து ஆடினேன். என்னுடன் ஆடிய மார்ஷும் சிறப்பாக ஆடினார். அவர் நிலைத்து நின்றதால் நானும் நன்றாக ஆடினேன். மைதானத்தில் நிற்கும் போது அதிகமாக எதையும் யோசிப்பதில்லை. ரன் குவிக்க வேண்டும் என்பது மட்டுமே எனக்குள் இருக்கும். அப்படித்தான் நேற்றும் ஆடினேன்’ என்றார்.