“நான் தடுப்பூசிக்கு எதிரானவன் இல்லை. ஆனால் செலுத்த சொல்லி வற்புறுத்தக் கூடாது” - ஜோகோவிச்
டென்னிஸ் விளையாட்டு உலகின் ஜாம்பவான்களில் ஒருவர் செர்பிய நாட்டை சேர்ந்த ஜோகோவிச். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அவரை அண்மையில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்று விளையாட ஆஸ்திரேலிய நாட்டு அரசு அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் தடுப்பூசி விவகாரத்தில் தனது நிலைப்பாடு என்ன என்பது குறித்து பேசியுள்ளார் ஜோகோவிச்.
“நான் தடுப்பூசிக்கு எதிரானவன் அல்ல. எனக்கும் அது சார்ந்த எந்தவொரு இயக்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் தனியொரு மனிதனுக்கு எது தேவை, தேவையில்லை என்பதை தெரிவு செய்வதற்கான உரிமை உள்ளது. எனது உடலில் என்ன செலுத்த வேண்டும் என்ற உரிமை எனக்கு உள்ளது. நான் நீண்ட நாள் விளையாடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.
ஆனால் இந்த தடுப்பூசி விவகாரத்தினால் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் நான் பங்கேற்பதையும், கோப்பை வெல்வதையும் தியாகம் செய்ய வேண்டியிருக்கும். அதற்கான விலையை கொடுக்கவும் நான் தயார்” என தெரிவித்துள்ளார் ஜோகோவிச்.
20 கிராண்ட்ஸ்லாம் டைட்டிலை வென்ற அவர் இதனை பிபிசி ஊடக நிறுவனத்துடனான பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தொற்றை உலக மக்கள் அனைவரும் ஒரே புள்ளியில் இணைந்தால் மட்டுமே அதற்கு ஒரு முடிவு காண முடியும் என்றும் அவர் சொல்லியுள்ளார். அதோடு எதிர்காலத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான சாத்தியக் கூறு குறித்து திறந்த மனநிலையுடன் தா இருப்பதாகவும் அவர் சொல்லியுள்ளார்.