ஊழல் புகார் சொல்வதா? கிரிக்கெட் வீரர் ராயுடு மீது நடவடிக்கை!

ஊழல் புகார் சொல்வதா? கிரிக்கெட் வீரர் ராயுடு மீது நடவடிக்கை!

ஊழல் புகார் சொல்வதா? கிரிக்கெட் வீரர் ராயுடு மீது நடவடிக்கை!
Published on

ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் மீது ஊழல் புகார் கூறிய கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காத விரக்தியில், அனைத்து வகையிலான போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்த முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு, பின்னர் தனது முடிவை மாற்றிக் கொண்டார். சமீபத்தில் நடந்த விஜய் ஹசாரே மற்றும் சையத் முஸ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஐதராபாத் அணி கேப்டனாக இருந்தார். 

இந்நிலையில் ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் மீது பல்வேறு புகார்களை அவர் தெரிவித்திருந்தார். சங்கத்தில் ஊழல் நிறைந்துள்ளது. பணம் மற்றும் ஊழல்வாதிகளால் கிரிக்கெட் சங்கம் நிரம்பியிருந்தால் ஐதராபாத் கிரிக்கெட் எப்படி முன்னேறும்?’ என்று தெலங்கானா அமைச்சருக்கு டேக் செய்து கூறியிருந்தார். ராயுடுவின் புகார் பற்றி ஐதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவர் அசாருதினிடம் கேட்டபோது, ’அவர் விரக்தி அடைந்த கிரிக்கெட் வீரர்’ என்றார்.

அசாருதின் கருத்துக்குப் பதிலளித்த ராயுடு, ’இதைத் தனிப்பட்ட பிரச்னையாகப் பார்க்க வேண்டாம். இந்தப் பிரச்னை நம்மை விட பெரியது. ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் என்ன நடக்கிறது என்பது நமக்குத் தெரியும். நமது தனிப்பட்ட மோதலை விட்டுவிட்டு, வருங்கால கிரிக்கெட் வீரர்களை காப்பாற்றுங்கள்’  என்று தெரிவித்திருந்தார்.

ராயுடுவின் இந்தப் புகார் பரபரப்பானது. ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்துக்கு இழிவை ஏற்படுத்தும் விதமாக ராயுடு பேசியதாகக் கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க சங்கம் முடிவு செய்துள்ளது. ’’சங்க விதிகளில் இருக்கும் நடைமுறைகளின் படி அவர் மீது நடவடிக்கை எடுக்க உள்ளோம். தலைமை செயல் அதிகாரி, அவரிடம் விசாரணை நடத்த இருக்கிறார். அவரது அறிக்கையின் படி, ராயுடு மீது நடவடிக்கை இருக்கும்’’ என்று ஐதராபாத் கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.விஜயானந்த் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ராயுடுவின் பேச்சுக்கு முன்னாள் வீரர்கள் சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ’’ராயுடு சொன்னது உண்மைதான். அவர் அனுபவம் வாய்ந்த கேப்டன். அவர் சொன்னதில் எந்த தவறும் இல்லை. அங்கு என்ன நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்’’ என்கிறார் ஐதராபாத் அணியின் முன்னாள் சுழல்பந்துவீச்சாளர் கவால்ஜித் சிங்.

’’உண்மையை சொன்னார் என்பதற்காக, ராயுடு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது சரியானதல்ல. கடந்த சில வருடங்களாக ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் எதும் சரியில்லை. திறமையை விட பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தலைவர் அசாருதின் இதை சரி செய்வார் என்று நம்புகிறேன்’’ என்கிறார் இந்த சங்கத்தின் முன்னாள் இடைக்கால செயலாளர் வெங்கடேஷ்வரன். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com