சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் பதவி கிடைத்தால் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வேன் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான மைக்கேல் ஹசி கூறினார்.
சுதாட்டப் புகார் காரணமாக இரண்டாண்டு தடைக்குப் பின் அடுத்த வருடம் களத்தில் இறங்குகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இரண்டு முறையை கோப்பை வென்ற தோனி தலைமையிலான இந்த அணியில் வீரராக இருந்தார் மைக்கேல் ஹசி.
சென்னை வந்துள்ள அவர் கூறும்போது, ’கடந்த 2 ஆண்டுகளில் நிறைய மாற்றங்கள் நடந்திருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பலர் வெவ்வேறு அணிக்கு சென்றிருக்கிறார்கள். இனி அதை கட்டி எழுப்புவது சவாலானதுதான். இருந்தாலும் சிஎஸ்கே மீண்டும் எழும் என்பதில் சந்தேகமில்லை. இந்த அணியில் நான் வீரராக மீண்டும் களமிறங்குவது கஷ்டம். ஆனால், பயிற்சியாளர் பதவி கிடைத்தால் மகிழ்ச்சியாக ஏற்பேன். தோனி பற்றி கேட்கிறார்கள். எனக்கும் அவருக்கும் நல்ல நட்பு இருக்கிறது. இந்தியாவுக்காக அவர் பல சாதனைகளை செய்திருக்கிறார். அடுத்த உலகக் கோப்பைப் போட்டியில் அவர் பங்கேற்க நினைக்கிறார் என்றால் அதில் என்ன சந்தேகம்? எல்லா தகுதியும் அவருக்கு இருக்கிறது’ என்றார்.