கிரிக்கெட் வீரர் கைஃபை, கலாய்த்த இங்கிலாந்தின் ஹூசைன்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப். இந்திய அணிக்காக 125 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் இப்போது அணியில் இல்லை.
2002-ம் ஆண்டு நாட்வெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் ஃபைனல் இங்கிலாந்தில் நடந்தது. இந்தியாவும் இங்கிலாந்தும் மோதின. முதலில் ஆடிய இங்கிலாந்து, 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் நாசர் ஹூசைன் 115 ரன்களும் டிரெஸ்கோதிக் 109 ரன்கள் குவித்தனர்.
இந்தப் போட்டியில் இந்திய அணி கண்டிப்பாகத் தோற்றுவிடும் என்றே கணிக்கப்பட்டது. ஏனென்றால் இந்திய அணி, சேவாக், கங்குலி, மோங்கியா, சச்சின், டிராவிட் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களில் தவித்துக்கொண்டிருந்தது.
இந்த நிலையில் யுவராஜ் சிங்குடன் கைகோர்த்தார் முகமது கைஃப். இருவரும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தனர். பின்னர் 49.3 ஓவரில் 326 ரன்கள் எடுத்து இந்திய அணி அபார வெற்றி பெற்றது. யுவராஜ் சிங் 69 ரன்களில் அவுட் ஆனார். கைப் 75 பந்துகளில் 87 ரன் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். இருவரும் சேர்ந்து 121 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர்.
இந்நிலையில், ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு நேற்று பதிலளித்தார் முகமது கைஃப். அப்போது நாட்வெஸ்ட் தொடர் பைனலில் இங்கிலாந்து அணி என்ன மாதிரியாக நடந்துகொண்டது என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த கைஃப், அந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் நாசர் ஹூசைன், தன்னை பஸ் டிரைவர் என்று கிண்டலடித்ததாகத் தெரிவித்துள்ளார்.
இந்தப் போட்டி முடிவில்தான் கங்குலி ஆக்ரோஷமாக சட்டையை கழற்றிச்சுற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.