முதல்முறையே ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடுகிறீர்கள் எப்படி?- SKY சொன்ன 'நச்' பதில்

முதல்முறையே ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடுகிறீர்கள் எப்படி?- SKY சொன்ன 'நச்' பதில்
முதல்முறையே ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடுகிறீர்கள் எப்படி?- SKY சொன்ன 'நச்' பதில்

முதல்முறை ஆஸ்திரேலியாவில் பங்குபெற்று விளையாடும் சூரியகுமார் யாதவ், எப்படி இப்படி சிறப்பாக செயல்படுகிறார் என்ற கேள்விக்கு சில சுவாரஸ்யமான பதில்களை அளித்துள்ளார்.

2022ஆம் ஆண்டின் டி20 உலகக்கோப்பை தொடர் அக்டோபரில் தொடங்கி விறுவிறுப்புகளுடன் கூடிய போட்டிகளோடு அரையிறுதியை எட்டியுள்ளது. சிறப்பாக விளையாடிய நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதியை எட்டியுள்ளன. இரண்டு அரையிறுதி போட்டிகள் நவ 09 மற்றும் 10ஆம் தேதிகளில் நடக்கவிருக்கிறது. இந்திய அணி 10ஆம் தேதி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

இந்திய அணி அதன் அபாரமான பேட்டிங்கின் காரணமாக மட்டுமே அரையிறுதியை எட்டியுள்ளது. அதற்கு முக்கிய காரணமாக இருந்தது விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவின் சிறப்பான பேட்டிங் தான். இருவரும் தலா 3 அரைசதங்களை அடித்து அசத்தியுள்ளனர். விராட் கோலி அனுபவுமுள்ள வீரராக இருந்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினாலும், முதல்முறையாக ஆஸ்திரேலியா போன்ற ஆடுகளங்களில் விளையாடும் சூரியகுமார் யாதவ் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்துவது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ரவி அஸ்வின் உடனான உரையாடலில் ஆஸ்திரேலியாவின் ஆடுகளங்களில் தனது பேட்டிங்கை வெளிப்படுவதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று பேசியுள்ளார் சூரியா. அப்போது பேசிய அவர், "எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள், நீங்கள் இதுவரை ஆஸ்திரேலியாவுக்குப் போகாததால், வேகமான பவுண்டரி ஆடுகளங்கள் மற்றும் பெரிய மைதானங்களுக்கு நீங்கள் உங்களை எப்படி தயார் செய்தீர்கள் என்று. நான் வான்கடேவில் நிறைய பயிற்சி செய்துள்ளேன். அங்குள்ள டிராக் ஒரு சிறந்த பவுன்ஸ் மற்றும் வேகமான இயல்புடையது. இது போன்ற பவுன்சி மற்றும் பெரிய மைதானங்களில் பேட்டிங் செய்வதை நான் ரசிக்கிறேன், அதில் பெரிய இடைவெளிகளைப் பார்ப்பதால், பந்தை அங்கு விரட்டுவது எனக்கு சுலபமாக இருக்கிறது அல்லது தேவைப்பட்டால் கடினமாக ஓடி ரன்களை பெற நான் தயாராக இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

மேலும், “நான் எனது பேட்டிங்கை ரசித்து வருகிறேன், எனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தும் போது, எனக்கு அது வெற்றியை தருவதால் நான் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஐசிசி டி20 தரவரிசையில் நம்பர் 1 இடம்பிடித்திருக்கும் சூரியகுமார், தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் 5 போட்டிகளில் 75 சராசரியுடன் 3 அரைசதங்களை அடுத்து 225 ரன்கள் சேர்த்துள்ளார். இந்த ஆண்டில் 28 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கும் அவர், 44.60 சராசரியில் 1,026 ரன்கள் எடுத்துள்ளார். அதில் ஒரு சதம் மற்றும் ஒன்பது அரைசதங்கள் அடக்கம். இந்த ரன்கள் 186.24 ஸ்ட்ரைக் ரேட்டில் வந்தன. டி20 வரலாற்றில் ஒரு காலண்டர் ஆண்டில் 1,000 ரன்கள் எடுத்த முதல் இந்திய வீரர் மற்றும் இரண்டாவது சர்வதேச வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com