திக்... திடுக்... இறுதிப்போட்டி: ஆச்சரிய ஆர்ச்சர், முன் கூட்டியே கணித்தது எப்படி?

திக்... திடுக்... இறுதிப்போட்டி: ஆச்சரிய ஆர்ச்சர், முன் கூட்டியே கணித்தது எப்படி?

திக்... திடுக்... இறுதிப்போட்டி: ஆச்சரிய ஆர்ச்சர், முன் கூட்டியே கணித்தது எப்படி?
Published on

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இப்படியெல்லாம் நடக்கும் என்று இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஐந்து,ஆறு வருடத்துக்கு முன்பே கணித்தது எப்படி என்று ஆச்சரியத்துடன் விவாதிக்கிறார்கள் ட்விட்டர்வாசிகள். 

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்தது. இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதிய இந்தப் போட்டியில், யாரும் எதிர்பாராத வகையில் திருப்பங்களும் விறுவிறுப்பும் நிறைந்திருந்தன. முதலில் ஆடிய நியூசிலாந்து, 8 விக்கெட் இழப்புக்கு 241 ரன் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியும், 241 ரன் எடுத்ததால் போட்டி, டை ஆனது. 

பின்னர் சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இந்த ஓவரும் டை ஆனதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அதிக பவுண்டரி அடித்த அணி என்ற கணக்கின் அடிப் படையில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. நியூசிலாந்தை விட, இங்கிலாந்து அணி கூடுதலாக 6 பவுண்டரிகளை அடித்திருந்தது. இதன்மூலம், தங்களது 44 ஆண்டுகால கனவைப் பூர்த்தி செய்துள்ளது இங்கிலாந்து அணி.

சூப்பர் ஓவரில் இங்கிலாந்து சார்பில் பந்துவீசியவர் ஜோஃப்ரா ஆர்ச்சர். கடைசி ஓவரில் அதிக ரன்கள் கொடுக்காமல் கட்டுப் படுத்திய ஆர்ச்சர், இங்கிலாந்து அணி உலகக் கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்தார். இதுவல்ல மேட்டர்! 

இவர் கடந்த ஐந்து, ஆறு வருடத்துக்கு முன்பே, உலகக் கோப்பையில் இப்படியெல்லாம் நடக்கும் என்று ட்வீட் செய்திருக்கிறார். அது அப்படியே இறுதிப்போட்டியில் நடந்ததுதான் ஆச்சரியம்!

2015 ஆம் ஆண்டிலேயே, ’சூப்பர் ஓவர்’ பற்றி கவலையில்லை என்றும் இந்திய டாப் ஆர்டர்களின் மோசமான ஆட்டம் பற்றியும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2014 ஆம் ஆண்டு மே 25 ஆம் தேதி, ரோகித்தின் முட்டாள்தனமான ஆட்டம் என்றும், 2015 ஜனவரியில் ரோகித், ராகுல் ஆட்டமிழப்பது பற்றியும் விராத்தின் மோசமான ஷாட் பற்றி 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமும் குறிப்பிட்டுள்ளார். 

அதே நேரம் மற்றொரு ட்வீட்டில் ரவீந்திர ஜடேஜா பேட்டிங்கில் மிரட்டுவார், முட்டாள்தனமான நியூசிலாந்து அணி என்றும் ஒவ்வொரு வரியில் குறிப்பிட்டிருக்கிறார். 

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியிலும் ஆர்ச்சரின் ட்வீட் அப்படியே நடந்திருக்கிறது. ஆரோன் பின்ச், டாஸ் வென்றார், நடையைக் கட்டினார் என முன் கூட்டியே ட்வீட் செய்திருந்தார். அதன்படியே, அவர் விக்கெட்டை ஆர்ச்சரே வீழ்த்தி இருக்கிறார்.

இறுதிப் போட்டியில் ஆட்டத்தை வென்று உலகக்கோப்பையை வெல்ல நியூசிலாந்துக்கு 16 ரன்கள் தேவைப்பட்டன, ஆனால் ஆர்ச்சர் 15 ரன்களை மட்டுமே கொடுத்தார். இதையும் 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே ட்வீட் செய்திருக்கிறார் ஆர்ச்சர்.

இதனால், இவர் ஆர்ச்சரா? அஸ்ட்ராலஜரா என்று வியக்கிறார்கள் ரசிகர்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com