செஸ் ஒலிம்பியாட் போட்டி எப்படி நடைபெறும்? பதக்கம் வழங்கப்படும் முறை என்ன? முழு விபரம்!

செஸ் ஒலிம்பியாட் போட்டி எப்படி நடைபெறும்? பதக்கம் வழங்கப்படும் முறை என்ன? முழு விபரம்!

செஸ் ஒலிம்பியாட் போட்டி எப்படி நடைபெறும்? பதக்கம் வழங்கப்படும் முறை என்ன? முழு விபரம்!
Published on

44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் சென்னை மாமல்லபுரத்தில் இன்று துவங்கியது. செஸ் ஒலிம்பியாட் தொடருக்கு ஒவ்வொரு நாடும் வீரர்களை எப்படி தேர்ந்தெடுத்தார்கள், எப்படி போட்டிகள் நடைபெறும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இன்று துவங்கிய இந்த தொடரில் 187 நாடுகளை சார்ந்த 350 அணிகள் மொத்தமாக பங்கேற்று உள்ளனர். ஓபன் பிரிவில் 188 அணிகளும் பெண்கள் பிரிவில் 162 அணிகளும் பங்கேற்றுள்ளனர். ஓபன் பிரிவில் 13 பெண் செஸ் வீராங்கனைகளும் விளையாட உள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட் தொடரை பொறுத்தவரை சர்வதேச செஸ் கூட்டமைப்பில் அங்கீகாரம் பெற்றுள்ள அனைத்து நாடுகளும் ஓபன் பிரிவில் ஒரு அணியும் பெண்கள் பிரிவில் ஒரு அணியும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எந்த நாடு ஒலிம்பியாட் தொடரை நடத்துகிறதோ அந்த அணி மட்டும் இரண்டு பிரிவிலும் தலா இரண்டு அணிகளை பதிவு செய்து கொள்ளலாம்.

பதிவு செய்யும் காலம் முடிந்தபின்பு மொத்த அணிகளின் எண்ணிக்கை ஒற்றைப்படையில் இருக்கும்பட்சத்தில் போட்டியை நடத்தும் நாட்டில் இருந்து மூன்றாவது அணி பங்கேற்க அனுமதி வழங்கப்படும். அந்த வகையில் 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரை பொறுத்தவரை இந்தியாவில் ஓபன் பிரிவில் மூன்று அணிகளும், பெண்கள் பிரிவில் மூன்று அணிகளும் விளையாட உள்ளன.

ஒலிம்பியாட் போட்டிக்கான வீரர்களை ஒவ்வொரு நாடும் ஒலிம்பியாட் தொடர் துவங்குவதற்கு முன் உள்ள மூன்று மாதங்களில் சர்வதேச செஸ் கூட்டமைப்பு வெளியிடும் வீரர்கள் ரேட்டிங் பட்டியலில் அந்தந்த நாடுகளில் முதல் 5 இடங்களை பிடிக்க கூடிய வீரர்களை அவர்களுடைய அணியின் வீரர்களாக தேர்வு செய்து வருகின்றனர்.

ஒலிம்பியாட் போட்டிக்கான அணியில் 5 வீரர்கள் இருந்தாலும் 4 வீரர்கள் மட்டுமே ஒரே நேரத்தில் விளையாட முடியும். 4 வீரர்களுக்கும் ஒரே நேரத்தில் போட்டிகள் நடத்தப்படும். ஒரு வீரர் வெற்றி பெற்றால் 1 புள்ளி என்ற கணக்கின் அடிப்படையில் மொத்தம் உள்ள 4 புள்ளிகளில் அதிக புள்ளிகள் பெற கூடிய அணி அந்த சுற்றில் வெற்றி பெற்ற அணியாக அறிவிக்கப்படும்.

ஒரு சுற்றை ஒரு அணி வெற்றி பெற்றால் அந்த அணிக்கு 1 புள்ளி வழங்கப்படும். டிரா செய்தால் அரை புள்ளியும் வழங்கப்படும். இந்த ஆண்டு நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் தொடரை பொறுத்தவரை 11 சுற்றுகள் நடைபெறுகிறது, அதன் அடிப்படையில் 11 சுற்றுகள் முடிவில் அதிக புள்ளிகள் பெற்ற அணிகள் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்கள்.

அப்படி முதல் இரண்டு இடங்களில் உள்ள இரண்டு அணிகளும் ஒரே புள்ளியை பெற்றிருந்தால் ,அந்த இரண்டு அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியில் யார் வெற்றி பெற்றார்களோ அந்த அணிக்கு தங்கமும் ,தோல்வி அடைந்த அணிக்கு வெள்ளி பதக்கமும் வழங்கப்படும். வீரர்களுக்கான பதக்கத்தை பொறுத்தவரை 11 சுற்றுகளில் தனி வீரராக அதிக புள்ளிகள் பெற்ற வீரர்களுக்கு முறையாக தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஒலிம்பியாட் தொடரில் இதுவரை இந்தியா ஒரு தங்க பதக்கமும்,2 வெண்கல பதக்கமும் வென்றுள்ளது. கொரோனா காரணமாக 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ஒலிம்பியாட் தொடர் ஆன்லைன் முறையில் நடைபெற்றது. இதுவரை மூன்று பதக்கங்களை மட்டுமே இந்தியா பெற்று இருந்தாலும் கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர்கள் பல பட்டங்களை வென்று வருவதால் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் இந்த தொடரில் நிச்சயமாக பதக்கம் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com