பல சீனியர் வீரர்களுக்கு கிடைக்காத ஆதரவு தோனிக்கு எப்படி கிடைத்தது?- யுவராஜ் கோபம் நியாயமா?

பல சீனியர் வீரர்களுக்கு கிடைக்காத ஆதரவு தோனிக்கு எப்படி கிடைத்தது?- யுவராஜ் கோபம் நியாயமா?
பல சீனியர் வீரர்களுக்கு கிடைக்காத ஆதரவு தோனிக்கு எப்படி கிடைத்தது?- யுவராஜ் கோபம் நியாயமா?

2011 ஆம் ஆண்டுக்கு பின் சேவாக், லட்சுமணன் உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு கிடைக்காத ஆதரவு தோனிக்கு மட்டும் தொடர்ந்து கிடைத்ததாக யுவராஜ் சிங் கூறியுள்ளார் அவரது கூற்று சரியா என்பதை ஒரு மீளாய்வுக்கு உட்படுத்தலாம்!

“தோனிக்கு கேரியரின் முடிவில் அவருக்கு நிறைய ஆதரவு இருந்தது. 2019 ஆம் ஆண்டும் உலகக் கோப்பைக்கு அழைத்துச் சென்றனர். பல சீனியர் வீரர்களுக்கு அந்த ஆதரவு கிடைக்கவில்லை” என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கூறியுள்ளார். யுவராஜ் சிங்கின் புகழ்பெற்ற வாழ்க்கையில் ஏற்பட்ட சில குறைபாடுகளில் 2014 டி20 உலகக் கோப்பையும் அடங்கும். யுவராஜ் 2007 T20 உலகக் கோப்பையில் இந்தியாவின் நட்சத்திர வீரராக இருந்தார், மேலும் 2011 ODI உலகக் கோப்பையில் தொடர் நாயகனாகவும் இருந்தார். இவை இரண்டிலும் இந்தியா வெற்றி பெற்றது.

இருப்பினும், 2014 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கைக்கு எதிராக அவரது மெதுவான ஆட்டம் பெரிதும் விமர்சிக்கப்பட்டது. 21 பந்துகளில் 11 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார் யுவராஜ். இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 130 ரன்களை எடுத்தது. இலங்கை 6 விக்கெட்டுகள் மற்றும் 13 பந்துகள் மீதமுள்ள நிலையில் இலக்கை எளிதாகத் துரத்தி வென்றது. எட்டு வருடங்களுக்கு பிறகு நிர்வாகத்தின் ஆதரவின்மை குறித்து யுவராஜ் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

யுவராஜ் சிங்கின் கோபக் கனல்:

“தோனியை அவரது கேரியரின் முடிவில் பாருங்கள். அவருக்கு விராட் மற்றும் ரவி சாஸ்திரியின் ஆதரவு அதிகம். அவர்கள் அவரை 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு அழைத்துச் சென்றனர். அவர் இறுதி வரை விளையாடினார. மேலும் 350 ஆட்டங்களில் விளையாடினார். ஆதரவு மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன், ஆனால் இந்திய கிரிக்கெட்டில் அனைவருக்கும் ஆதரவு கிடைக்காது. ஹர்பஜன் சிங், வீரேந்திர சேவாக், விவிஎஸ் லட்சுமண், கவுதம் கம்பீர் போன்ற சிறந்த வீரர்கள் இருந்திருக்கிறார்கள், அவர்களுக்கு ஆதரவு கிடைக்கவில்லை.

நீங்கள் பேட்டிங் செய்யும்போது, உங்கள் தலையில் கோடாரி தொங்கிக்கொண்டிருப்பது உங்களுக்குத் தெரிந்தால், நீங்கள் எப்படி கவனம் செலுத்தி பேட்டிங் செய்து உங்களின் சிறந்ததைக் கொடுப்பீர்கள். 2011 உலகக் கோப்பைக்குப் பிறகு எல்லாம் மாறியது” என்று யுவராஜ் சிங் குறிப்பிட்டார். யுவராஜ் குறிப்பிட்ட விஷயம் மிக முக்கியமானது. அவர் குறிப்பிட்ட வீரர்கள் அந்த தருணத்தில் எப்படி செயல்பட்டார்கள் என்பதை வைத்தே அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்ய இயலும்.

சேவாக்:

சேவாக்கை எடுத்துக் கொண்டால் இந்திய அணியின் அதிரடி ஓப்பனர். சச்சினின் சிறந்த இணை ஓப்பனராக வலம் வந்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகக் கோப்பை நடைபெற்ற வருடங்களை தவிர மற்ற ஆண்டுகளில் 50க்குன் குறையாத சராசரியை வைத்து அற்புதமாக விளையாடி வந்துள்ளார். சில ஆண்டுகளில் ஆயிரம் ரன்களை குவித்து வந்த அவர் 2011க்கு பின் சுணங்கிப் போனார். 2011 முதல் அவர் ஓய்வு பெறும் 2013 வரை எடுத்த மொத்த ரன்கள் 916. சராசரி 30க்கும் கீழே சரிந்து போயிருந்தது. இதே நிலைதான் ஒருநாள் போட்டிகளிலும்! 40க்கு மேல் சராசரியில் பயணித்த அவரது ஆட்டம் 2011க்கு பின் 21 ரன்களாக சரிந்தது என்பது தரவுகள் சொல்லும் உண்மை! பீல்டிங்கிலும் சேவாக் சற்று சுணக்கம் காட்டவே அவரது கிரிக்கெட் கேரியர் இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்து விட்டது.

லட்சுமண்:

லட்சுமணும் சேவாக்கை போலவே டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 சராசரியில் பயணித்து வந்தவர். 2011க்கு பின் தனது ஆட்டத்தில் தொய்வு ஏற்படுவதை உணர்ந்ததும் 2012-லேயே ஓய்வை அறிவித்து விட்டார். அந்த ஆண்டில் 3 போட்டிகளில் மட்டும் பங்கேற்று 6 இன்னிங்ஸ்களில் களமிறங்கி 152 ரன்களை எடுத்தார் லட்சுமணன். ஆனால் அவர் ஓய்வு பெறும் தருணத்தில் அவருக்கு அதிகமான போட்டிகளில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்து அடங்கியது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில் ஓய்வை நெருங்கிய இறுதி ஆட்டங்களில் இவரது ஃபீல்டிங்கும் விமர்சனத்துக்கு உள்ளாக தவறவில்லை.

ஹர்பஜன் சிங்: 

ஹர்பஜன் சிங் இந்திய அணியின் தவிர்க்க முடியாத ஆல் ரவுண்டராக ஜொலித்து வந்தார். 2011 வரை! நெருக்கடியான போட்டிகளில் பேட்டிங்கில் இந்திய அணிக்கு பக்கபலமாக இருந்த அவருக்கு 2011க்கு பின் டெஸ்ட் ஆட்டத்தில் களமிறங்கும் வாய்ப்பு அதிகமாக அமையவில்லை. அவருக்கு முன்பாக பேட்டிங் சென்றவர்கள் நிலைத்து நின்று அவுட்டாகாமல் விளையாடியதால், இவரது பேட்டிங் வாய்ப்பு தற்செயலாக குறைந்தது. ஆனால் பவுலிங்கில் வருடத்திற்கு 20க்கு குறையாத டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய அவரால் 2011க்கு பின் அடுத்த 4 வருடங்களில் வீழ்த்த முடிந்தது வெறும் 11 விக்கெட்டுகளே! ஆனால் 140 ஓவர்கள் வரை அவர் வீசும் வாய்ப்பை பெற்றிருந்தார். ஒருநாள் போட்டிகளிலும் அடுத்தடுத்து சிறந்த புதிய பவுலர்கள் அடியெடுத்து வைக்க, அவரது ஓய்வுக்கான உரை எழுதப்பட்டுவிட்டது.

கவுதம் கம்பீர்:

கடைசியாக கம்பீர்! 2012 வரை 40க்கும் குறையாத ஒருநாள் சராசரி! 2013 ஆம் ஆண்டில் 7 போட்டிகளில் விளையாடி 153 ரன்களை மட்டும் அவர் சேர்க்க, சராசரி 21 ஆக சரிந்தது. டெஸ்ட் போட்டிகளிலும் 2012 க்கு பின் கம்பீர் குறைவான ரன்களையே எடுத்திருந்தார். ஆனால் மற்ற மூவரை விட கம்பீருக்கு ஆதரவாக எழுந்த குரல்களே அதிகம். அவருக்கு அதிக போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. மற்ற மூவரின் பீல்டிங் கேள்விக்குள்ளாக்க பட்ட போதிலும், கம்பீர் அங்கும் சிறப்பாக செயல்பட்டதால் அந்த விமர்சனங்கள் நிலைபெற்று விட்டன. அதன் காரணமாகவே தற்போது வரை கோபக் கனலிலேயே தொடர்ந்து வருகிறார்.

தோனிக்கு மட்டும் ஏன்?

கம்பீர் தவிர மற்ற மூவரது உடல்தகுதியும் அவர்களது ஓய்வுக்கு வழிவகுத்ததை மறுக்க இயலாது. யுவராஜ் சொல்லும் இந்த ஒற்றை வரி தான் நம் கவனத்தை இந்த விஷயத்தில் குவிக்க வைக்கிறது. அது தோனிக்கான ஆதரவு கடைசி வரை கிடைத்தது என்பது! ஒருநாள் போட்டிகளில் அவர் ஓய்வு பெற்ற வருடத்தில் அவரது சராசரி 60 ஆகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் விடைபெற்ற போது 31 சராசரியுடன் இருந்தபோதும் 500 ரன்களுக்கு மேல் குவித்திருந்தார் என்பதும் கவனிக்க வேண்டியது. மற்றவர்களை போல தோனியிடம் அவ்வளவு எளிதாக Swap செய்ய இயலாது. ஒரு விக்கெட் கீப்பரை வைத்துக் கொண்டு தோனிக்கு விடைகொடுக்க இயலாது. அணியை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டுமல்லவா! அந்த அணியை வழிநடத்த ஒரு சிறந்த வீரரும் தேவை! அதை அணி நிர்வாகம் செய்து தோனியை பொறுமையாக நீக்கியதாக சிலர் சொல்வதுண்டு.

யுவராஜ் கேள்விக்கு இதுதான் பதில்:

ஆனால் ஆஸ்திரேலிய தொடரின் மத்தியில் டெஸ்ட் போட்டியில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் தோனி. கிட்டத்தட்ட ஒருநாள் போட்டியிலும் அதே நிலைதான்! தான் பாதுகாக்க விரும்பும் வீரருக்கு ஒரு பிரியாவிடை போட்டியை நடத்தாமல் அணி நிர்வாகம் வழியனுப்புமா? சச்சினுக்கு நிகழ்ந்த பிரியாவிடை போட்டி, “நிர்வாக ஆதரவு” பெற்ற தோனிக்கு ஏன் நிகழவில்லை? என்ற கேள்வியே யுவராஜின் குற்றச்சாட்டை தவிடுபொடியாக்கவல்லது! நிர்வாகம் அடுத்தது யார் என்ற தேடுதலில் இருந்ததால் தோனியும் தொடர்ந்தார் என்பது மறுக்கவியலா உண்மை! தொய்வின்றி அவர் விளையாடியதும் அவர்கள் தேடுதலை நெருக்கடிக்கு உள்ளாக்கவில்லை! கோலியை கண்டடைந்து டெஸ்ட் கேப்டனாக்க, அவர் டெஸ்ட் வரலாற்றில் இந்திய அணி தொடாத உயரங்களுக்கு அழைத்துச் சென்று ஆச்சரியப்படுத்தினார்.

யுவராஜ் இதனை உணரட்டும்:

சச்சினை போன்று உலகக் கோப்பையுடன் ஒருநாள் போட்டிகளில் விடைபெற தோனிக்கு நிர்வாகம் வாய்ப்பளித்தது. ஆனால், கோப்பை கைநழுவிச் செல்ல அதுவும் நிகழா ஒன்றாகிப் போனது. அவரது ஆட்டத்தால் உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியில் எந்த தீங்கும் நேரவில்லை என்பதால் அங்கு அவரை தேர்வு செய்ததை குற்றமாக்க இயலாது. அடுத்த கட்டத்திற்கு அணி தயாரானதும் அவர் படிப்படியாக விலகிவிட்டார். அவரைப் போல யுவராஜும் உணர்ந்திருந்தால், ஓய்வு அவருக்கு மகிழ்ச்சியான ஒன்றாக அமைந்திருக்கும் என்பதே நிதர்சனம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com