பந்துவீச்சாளர்களிடம் அதிகம் பேசக்கூடாது என புரிந்துகொண்டேன் - விராட் கோலி
ஐபிஎல் தொடரின் 31வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்றது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதனாத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனால் முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் வோரா 45, மெக்குல்லம் 37 மற்றும் விராட் கோலி 32 ரன்கள் எடுத்தனர்.
இதையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் ஹர்திக் பாண்டியா அதிகபட்சமாக 50 ரன்கள் குவித்தார். அவர் தவிர டுமினி 23, க்ரூனல் பாண்டியா 23 ரன்கள் எடுத்தனர்.
இந்த ஆட்டம் தொடர்பாக பேசியுள்ள விராட் கோலி, ‘பந்துவீச்சாளர்களிடம் அதிக ஆலோசனை கூறுவதும், அதிகம் பேசுவதும் அவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதை நான் புரிந்துகொண்டேன். அவர்களிடம் நான் உங்களுக்கு எது வருமோ அதை செய்யுங்கள் என்றேன். உங்க விருப்படி ஃபீல்டர்களை நிறுத்திக்கொள்ளுங்கள், உங்கள் விருப்பபடி திட்டமிடுங்கள், வீரர்களை உங்கள் பந்துவீச்சுக்கு ஏற்றவாறு வழிநடத்துங்கள் என்றேன்’ என்று கூறினார்.