ஜார்க்கண்ட்| தோனியின் ராஞ்சி வீட்டுக்கு நோட்டீஸ்? அதிகாரிகள் விசாரணை.. பின்னணி இதுதான்!
2007 டி20 உலகக்கோப்பை, 2011 ஒருநாள் உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என மூன்று ஐசிசி கோப்பைகளை வென்று இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இடம்பிடித்த வெற்றி கேப்டனாய் வலம் வருபவர் மகேந்திர சிங் தோனி. இவர், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்தவர். தோனிக்கு ஜார்க்கண்ட் அரசால் அன்பளிப்பு பத்திரம் மூலம் ஹர்மு ஹவுசிங் காலனியில் ஐந்து கட்டா நிலம் ஒதுக்கப்பட்டது. இந்த காலனியில் உள்ள தனது வீட்டை வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக ஜார்க்கண்ட் மாநில வீட்டு வசதி வாரியம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், தோனிக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வீட்டு மனை வாரியத்தின் தலைவர் சஞ்சய் லால் பஸ்வான், ”குடியிருப்பு மனைகளை வணிக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவது தடை செய்யப்படுகிறது. நாங்கள் புகார்களைப் பெற்றுள்ளோம். அதுகுறித்து விசாரணைக்கு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், தோனிக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.