ஆசியக் கோப்பை கிரிக்கெட்: தகுதி பெற்றது ஹாங்காங்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடருக்கு தகுதிச் சுற்று மூலம் ஹாங்காங் அணி வாய்ப்புப் பெற்றுள்ளது.
14-வது ஆசியக் கோப்பைப் போட்டி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரும் 15-ம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை நடக்கிறது. மொத்தம் 13 போட்டிகள் நடக்கின்றன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி என 6 அணிகள் இதில் பங்கேற்கிறது.
தகுதிச்சுற்று ஆட்டங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், ஏமன், நேபாளம், மலேசியா, ஹாங்காங் ஆகிய அணிகள் மோதின. இதில் வெற்றி பெறும் அணி ஏ பிரிவில் இடம் பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தகுதிச்சுற்றுக்கான இறுதிப் போட்டி மலேசியாவின் கோலாலம்பூரில் நேற்று நடந்தது. ஹாங்காங் அணியும், ஐக்கிய அரபு அமீரகம் அணியும் மோதின. மழை காரணமாக 24 ஓவர்களாக குறைக் கப்பட்டது.
Read Also -> இன்று கடைசி டெஸ்ட்: ஆறுதல் வெற்றி பெறுமா இந்திய அணி?
முதலில் பேட் செய்த ஐக்கிய அமீரக அணி 24 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஆஷப் அகமது 79 ரன்கள் எடுத்தார். ஹாங்காங் தரப்பில் ஆஜஸ்தான் 5 விக்கெட்டுகளையும், நதீம் அகமது 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஹாங்காங் அணி 23.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. இதையடுத்து ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்த அணி வரும் 16-ம் தேதி நடக்கும் தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்திய அணியுடன் 18 ஆம் தேதி மோதுகிறது.
இந்த தொடரில், இந்திய அணியில் விராத் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார்.