
''இது அழகான தருணம்'' ஆசியக்கோப்பையுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஷேர் செய்து நெகிழ்ச்சி பதிவிட்டுள்ளார் ஷிகர் தவான்.
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஹாங்காங் நாடுகள் பங்கேற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபுதாபி நகரங்களில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் இந்தியா - பங்களாதேஷ் அணிகள் நேற்று மோதின. பரபரப்பான ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இந்திய அணி 7வது முறையாக கோப்பையை வென்றது.
இந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தவானுக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது. நேற்றைய ஆட்டத்தின் வெற்றிக்குப்பின் தனது மகன் மற்றும் வெற்றிக்கோப்பையுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து நெகிழ்ச்சி பதிவிட்டுள்ளார் தவான்.
அந்தப் பதிவில் ''எனது மகனுடன் வெற்றிக்கோப்பையை தாங்கி நிற்கிறேன். இது அழகான தருணம் இது. நல்ல தொடர். நல்ல இறுதிப்போட்டி. ஆசியக்கோப்பை நம்முடனே இருக்கிறது'' என்று பதிவிட்டுள்ளார்.
போட்டிக்கு முன்னதாக நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தவான், ''இது எனக்கு ஒரு நல்ல தொடர், இதனை நான் ரசித்து விளையாடிக் கொண்டிருக்கிறேன். எனது பேட்டிங் நல்ல முறையில் உள்ளது. இதனை தொடரவே விரும்புகிறேன். அமைதியான, முதிர்ச்சியான எனது விளையாட்டை நான் ரசித்து விளையாடுகிறேன்'' என்று தெரிவித்திருந்தார்.
ஆசியக்கோப்பை தொடரில் விளையாடிய தவான் 5 ஆட்டங்களில் 342 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.