உலக ஹாக்கி லீக்: அரையிறுதியில் இந்தியா போராடித் தோல்வி
உலக ஹாக்கி லீக் தொடரின் அரையிறுதியில் இந்திய அணி ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜென்டினாவிடம் போராடித் தோல்வி அடைந்தது.
உலக ஹாக்கி லீக் தொடரின் அரையிறுதி போட்டி புவனேஸ்வரில் நேற்று நடைப்பெற்றது. இந்தப்போட்டியில் இந்திய அணியும், ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜென்டினாவும் மோதின. புவனேஸ்வரில் நடந்த போட்டியில் 17ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக்கி அர்ஜென்டினா அணி முன்னிலை பெற்றது. 36ஆவது நிமிடத்தில் அடுத்தடுத்து கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்புகளை இந்திய அணி வீரர்கள் கோட்டைவிட்டனர். முடிவில் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் அணியான அர்ஜென்டினா 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இன்று நடைபெறும் அரையிறுதியில் ஆஸ்திரேலியா - ஜெர்மனி அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். தோல்வி அடையும் அணியுடன் வெண்கலப் பதக்கத்திற்காக இந்திய அணி நாளை பலப்பரீட்சை நடத்தவுள்ளது.