‘அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர் விளாசிய ரோகித்’ - சூப்பர் ஓவரில் இந்திய அணி த்ரில் வெற்றி

‘அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர் விளாசிய ரோகித்’ - சூப்பர் ஓவரில் இந்திய அணி த்ரில் வெற்றி
‘அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர் விளாசிய ரோகித்’ - சூப்பர் ஓவரில் இந்திய அணி த்ரில் வெற்றி

ஹாமில்டனில் நடைபெற்ற மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி ஹாமில்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 179 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 65 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து, 180 ரன்கள் என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.

விக்கெட்டுகள் ஒருபுறம் தொடர்ச்சியாக வீழ்ந்தாலும், தனி ஒருவனாக கேப்டன் வில்லியம்சன் இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்தார். நியூசிலாந்து அணி எளிதில் வெற்றி பெற்றுவிடும் என்றே கருதப்பட்டது. இறுதி ஓவரில் 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. களத்தில் 95 ரன்களுடன் வில்லியம்சன் உள்ளார். கூடவே டெய்லர் இருந்தார். கடைசி ஓவரை சமி வீசினார்.

முதல் பந்திலேயே இமாலய சிக்ஸர் விளாசினார் டெய்லர். இதனால், அடுத்த 5 பந்துகளுக்கு வெறும் நான்கு ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை ஏற்பட்டது. இரண்டாவது பந்தில் ஒரு ரன் அடிக்கப்பட்டது. அடுத்த நான்கு பந்துகளில் வெறும் மூன்று ரன்களே தேவை. ஆனால், 95 ரன்கள் எடுத்திருந்த வில்லியம்சன் ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய டிம் செஃபெர்ட் முதல் பந்தில் ரன் எதுவும் எடுக்கவில்லை, ஐந்தாவது பந்தில் பைஸ் மூலம் ஒரு ரன் எடுக்கப்பட்டது. ஆட்டம் டை
ஆனது. கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலை. ஆனால், சமி பந்துவீச்சில் போல்ட் ஆனார் டெய்லர். அதனால், ஆட்டம் சமனில் முடிந்து, சூப்பர் ஓவருக்கு சென்றது.

சூப்பர் ஓவரில் முதலில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. வில்லியம்சன், குப்தில் களமிறங்கினர். வில்லியம்சன் ஒரு சிக்ஸர், பவுண்டரியும், குப்தில் ஒரு பவுண்டரியும் விளாச நியூசிலாந்து அணி 17 ரன்கள் எடுத்தது. 18 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்திய அணிக்காக ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் களமிறங்கினர். முதல் நான்கு பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட, கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. களத்தில் ரோகித் சர்மா இருந்தார். போட்டி மிகவும் பரபரப்பான நிலைக்கு சென்றது. கடைசி இரண்டு பந்துகளில் சிக்ஸர் விளாசி இந்திய அணியின் வெற்றியை ரோகித் உறுதி செய்தார். இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com