ஹெட்மையர் அபார சதம்: த்ரில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் பங்களாதேஷ் அணி, 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது. இந்த தொடரில் பங்களாதேஷ் அணி மோசமாகத் தோற்றது.
இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகிறது. முதல் ஒரு நாள் போட்டியில், தமிம் இக்பால் ஷகில் அல் ஹசன் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் பங்களாதேஷ் வெற்றி பெற்றது. தமிம் இக்பால் சதம் அடித்திருந்தார்.
இந்நிலையில் இரண்டாவது ஒரு நாள் போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி, முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸின் அனுபவ வீரர் கிறிஸ் கெய்லும் லெவீஸும் களமிறங்கினர். லெவிஸ் 12 ரன்னில் மோர்டாஸா பந்துவீச்சில் அவுட் ஆனார். அடுத்து ஹோப் வந்தார். கெயிலும் இவரும் அடித்து ஆடினார். கெயில், 29 ரன்கள் எடுத்திருந்த போது மெஹிடி பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆனார்.
அடுத்து ஹெட்மயர் வந்தார். ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சில் ஹோப், சபீர் ரஹ்மானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 25 ரன்கள் சேர்த்தார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்தாலும் ஹெட்மையர் அபாரமாக ஆடி சதமடித்தார். அவர் 93 பந்துகளில் 7 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 125 ரன்கள் குவித்தார். அவருக்கு துணையாக பாவெல் 44 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 49.3 ஓவர்களில் 271 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது அந்த அணி. கடைசி பத்து ஓவர்களில் மட்டும் வெஸ்ட் இண்டீஸ் அணி 89 ரன்கள் எடுத்தது.
பங்களாதேஷ் தரப்பில் ரூபெல் ஹூசைன் 3 விக்கெட்டும் ஷகிப் அல் ஹசன், முஸ்தாபிஸூர் ரகுமான் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய பங்களாதேஷ் அணி, சரியான பதிலடி கொடுத்தது. இருந்தாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்ததால் கடைசி கட்டத்தில் வெறும் 3 ரன்களில் பரிதாப தோல்வியைத் தழுவியது. கடைசி ஓவரில் அந்த அணி வெற்றி பெற 8 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை ஹோல்டர் வீசினார். முதல் பந்தில் முஷ்பிகுர் ரஹ்மான் அவுட் ஆனார். அடுத்த இரண்டு பந்துகளில் ரன் ஏதும் கொடுக்க வில்லை. இதனால் பரபரப்புத் தொற்றிக்கொண்டது. அடுத்த பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தார் ஹூசைன். கடைசி இரண்டு பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அதில் இரண்டு ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
கடந்த போட்டியில் சதம் அடித்த தமிம் இக்பால் இந்தப் போட்டியில் 54 ரன்கள் எடுத்து பிஷூ பந்துவீச்சில் ஸ்டம்பிங் செய்யப்பட்டு வெளியேறி னார். ஷகிப் அல் ஹசன் 56 ரன்களும் முஷிபிகுர் ரஹ்மான் 68 ரன்களும், மகமுத்துல்லா 39 ரன்களும் எடுத்தனர். அபார சதமடித்த ஹெட்மையர் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. தொடர் யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும், மூன்றாவது ஒரு நாள் போட்டி 28 ஆம் தேதி நடக்கிறது.