குப்பை அள்ளுவது பெருமை ! ஜப்பான் ரசிகர்கள் ஓர் உதாரணம்

குப்பை அள்ளுவது பெருமை ! ஜப்பான் ரசிகர்கள் ஓர் உதாரணம்
குப்பை அள்ளுவது பெருமை ! ஜப்பான் ரசிகர்கள் ஓர் உதாரணம்

ஜப்பான் என்றால் முதலில் நம் நினைவுக்கு வருவது சுறுசுறுப்பு, இரண்டாவது அவர்களின் அயராத உழைப்பு. இப்போது, ஜப்பான் என்றால் சுத்தம் என்று அந்நாட்டு கால்பந்தாட்ட ரசிகர்கள் பெயர் பெற்றுள்ளார்கள். ஜப்பான் அணி பங்கேற்கும் போட்டிகளை காண வரும் அந்நாட்டு ரசிகர்கள், போட்டி முடிந்த பின்பு ஸ்டேடியத்தில் இருக்கும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

ரஷ்யாவில் 21 ஆவது பிஃபா உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகளை நடைபெற்று வருகின்றன. இந்தக் தொடரில் ஜப்பான் நாக் அவுட் சுற்றுக்கு தகுதிப் பெற்று இருந்தது. நாக் அவுட் போட்டியில் நேற்று பெல்ஜியம் அணியை எதிர்கொண்டது ஜப்பான் அணி. மிகவும் பரபரப்பாக நடைபெற்றப் போட்டியில் போராடி 2-3 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வியடைந்தது ஜப்பான்.

ஜப்பான் நிச்சயம் வெற்றிப்பெற்று வரலாற்றில் முதல்முறையாக உலகக் கோப்பை காலிறுதியில் பங்கேற்கும் என அந்நாட்டு ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். ஜப்பான் தோல்வியடைந்ததால் ஸ்டேடியத்தில் இருந்த ஜப்பான் ரசிகர்கள் கதறி அழுதனர். சில ஜப்பான் வீரர்களும் அழுதனர். ஆனால் இந்தத் தோல்வியை மறந்து, ஜப்பான் ரசிகர்கள் ஸ்டேடியத்தில் இருந்த குப்பைகள் அகற்றத் தொடங்கினர்.

தாங்கள் கொண்டு வந்த மிகப் பெரிய பிளாஸ்டிக் பைகளை கொண்டு ரசிகர்கள் வீசிய குப்பைகளை சேகரித்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு முன்பு லீக் போட்டிகளில் கூட ஜப்பான் ரசிகர்கள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஜப்பானியர்களின் இந்தப் பழக்கம் குழந்தைப்பருவம் முதல் வளர்த்தெடுக்கப்படும்.

பள்ளிகளில் குழந்தைகள் தங்கள் இடத்தை தாங்களே சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், வகுப்பறைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ள அங்கு பழக்கப்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தைப் பருவம் முதல் சொல்லிச் சொல்லி வளர்ந்து வந்த இந்தப் பழக்கம் விளையாட்டு ஸ்டேடியம் மட்டுமல்ல எங்கு ஜப்பானியர்கள் கூடினாலும் அங்கு குப்பைகளை அகற்றி சுத்தம் செய்துவிட்டுத்தான் செல்வார்கள் என்கிறது ஜப்பானிய பத்திரிக்கை ஒன்று.

சுத்தமாக வைத்திருக்க குப்பை அள்ளுவதை ஜப்பானியர்கள் தரக்குறைவாக நினைப்பதில்லை பெருமையாகவே நினைக்கின்றனர். அதைதான் அவர்கள் மற்ற நாட்டு கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு உணர்த்துகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com