"ரூ.30 லட்சம் சம்பாதித்தால் போதும்" தோனியின் அன்றைய லட்சியம் !
கிரிக்கெட் மூலம் ரூ.30 லட்சம் சம்பாதித்தால் போதும் நிம்மதியாக சொந்த ஊரில் செட்டில் ஆகிவிடுவேன் என்று ஆரம்ப காலத்தில் தோனி தன்னிடம் தெரிவித்ததாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
38 வயதான மகேந்திர சிங் தோனி உலகக் கோப்பை தொடருக்கு பிறகு எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லை. அதனால், அவர் அடுத்ததாக எந்தப் போட்டியில் விளையாடப் போகிறார் என்று அவரது ரசிகர்கள் ஏக்கத்தில் உள்ளனர். ஐபிஎல் போட்டிகளிலாவது அவர் விளையாடுவார் என்று பார்த்தால் அதுவும் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்தாண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் தோனிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், விரேந்திர சேவாக், கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே ஆகியோர், தோனி மீண்டும் அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை என்றே கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் அண்மையில் உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து வாசிம் ஜாஃபர், தோனியின் ஓய்வுக் குறித்து ஆதரவான கருத்துகளை மட்டுமே சொல்லி வருகிறார். அண்மையில் தோனி குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட வாசிம் " தோனி நல்ல உடற்தகுதியுடனும் ஃபார்முடன் இருந்தால் அவரை விட வேறு ஒரு வீரரை அணியில் சேர்ப்பது குறித்து யோசிக்க தேவையில்லை. ஸ்டம்புக்கு பின்னால் தோனி நிற்பது அணிக்கு மிகப் பெரிய பலம், மேலும் அவர் கடைசி ஓவர்களில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன். மேலும் தோனியை அணியில் சேர்ப்பதன் மூலம் ராகுலின் சுமை குறையும், தேவைப்பட்டால் ரிஷப் பன்ட்டையும் பேட்ஸ்மேனாக சேர்த்துக்கொள்ளலாம்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் #AskWasim என்ற ஹேஷ்டேக் மூலம் ரசிகர்கள் கேள்வி கேட்கலாம் என்று வாசிம் ஜாஃபர் பதிவிட்டிருந்தார். அப்போது ரசிகர் ஒருவர் "தோனியுடனான உங்களின் சுவையான அனுவத்தை பகிருங்கள்" என கேட்டுக்கொண்டார். அதற்கு பதிலளித்த வாசிம் ஜாஃபர் "எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, தோனி இந்திய அணியில் இடம் பிடித்த முதல் இரண்டு ஆண்டுகளில், தனக்கு கிரிக்கெட் மூலம் ரூ.30 லட்சம் வருமானம் கிடைத்தால் போதும், நான் என்னுடைய நிம்மதியான வாழ்க்கையை ராஞ்சியில் கழிப்பேன் என கூறினார்" என தெரிவித்துள்ளார்.