தோனியை வீழ்த்திய மார்க்கண்டே இவர்தான்!

தோனியை வீழ்த்திய மார்க்கண்டே இவர்தான்!

தோனியை வீழ்த்திய மார்க்கண்டே இவர்தான்!
Published on

ஒரே நாளில் ஹீரோ ஆவது இப்படித்தான்.

சென்னை -மும்பை அணிகளுக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில் சென்னையின் மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி, ’யாருப்பா இது?’ என்று கேட்க வைத்தவர் இளம் சுழல் மயங்க் மார்கண்டே. அவர் எடுத்த மூன்று விக்கெட்டுகளில் ஒன்று தோனியுடையது!

தனது முதல் போட்டியிலேயே ஆச்சரியப்படுத்தியதன் மூலம் திடீர் ஹீரோவாகி இருக்கிறார் மார்கண்டே. இதற்கு முன் அதிகம் கேள்விபட்டிருக்காத இந்த மார்கண்டே, பஞ்சாப்காரர்!

ஆரம்பத்தில் வேகப்பந்துவீச்சாளராக வேண்டும் என்று துடித்தவரை, சுழலுக்குத் திருப்பியது, இவரது பயிற்சியாளர்கள். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் ரீதிந்தர் சோதியிடம் பயிற்சி பெற்ற மார்கண்டே, பிறகு முனிஷ் பாலி நடத்தும் கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்றிருக்கிறார்.

ஜனவரியில் நடந்த செய்யது முஷ்டாக் அலி டிராபியில் ஜம்மு- காஷ்மீருக்கு எதிராக பஞ்சாப் சார்பில் அறிமுகமானார், முதன் முதலாக. இன்னும் ஒரு நாள் போட்டிகளில் அறிமுகமாகவில்லை இந்த 20 வயது வீரர். அதற்குள் ஐபிஎல் வாய்ப்பு. மும்பை அள்ளிக் கொண்டது இவரை. 

ஏற்கனவே மும்பை அணியில் இன்னொரு ஸ்பின்னராக, ராஜஸ்தானின் ராகுல் சாஹர் இருக்கும்போது, இவரது ஆக்‌ஷனை கவனித்தார் மும்பை பயிற்சியாளர் மகேலா ஜெயவர்த்தனே.

‘முதல் நாள் பயிற்சியிலேயே மார்கண்டே சிறப்பாக பந்துவீசுவதாக நினைத்தேன். அப்போதே அவர் ஸ்பெஷல் என முடிவு செய்தோம். அவரது துல்லியமான பந்துவீச்சு, மற்ற பந்துவீச்சாளர்களை விட வித்தியாசமானது. அதிக டி20 போட்டியில் விளையாடவில்லை என்றாலும் அவர் வித்தியாசப்படுத்தியும் கன்ட்ரோலாகவும் பந்துவீசுகிறார். இதுபோன்ற வீரர்கள்தான் அணிக்கு தேவை என்று வாய்ப்பு கொடுத்தோம். நாங்கள் நினைத்தது சரியாகத்தான் அமைந்தது’ என்கிறார் ஜெயவர்த்தனே.

தனது முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே அம்பதி ராயுடுவின் விக்கெட்டை வீழ்த்தி ஷாக் கொடுத்த மார்கண்டே, தோனியை நிற்கக் கூட விடவில்லை. வந்த வேகத்திலேயே அவரது விக்கெட்டை எடுத்துவிட்டார். அம்பயர் அவுட் கொடுக்கவில்லை என்றதுமே, மார்கண்டே டிஆர்எஸ் கேட்கச் சொன்னார் ரோகித்திடம். அவரது நம்பிக்கைக்கு மரியாதை கொடுத்தார் ரோகித். அப்பீலில் தோனி அவுட்!

இவரது விக்கெட்டுக்கு அடுத்து பலியானவர் தீபக் சாஹர். 4 ஓவர்கள் வீசி, 23 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய மார்கண்டேவை அடுத்தடுத்தப் போட்டிகளில் எப்படி பயன்படுத்தலாம் என தனி கவனம் செலுத்தத் தொடங்கியிருக் கிறது மும்பை அணி.

’சீனியர் வீரர்கள் என்றால் அனுபவம் வாய்ந்தவர்கள். அவர்களது அனுபவம் போட்டியில் கைகொடுக்கும்’ என்று கூறியிருந் தார், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் பிளம்மிங். அனுபவம் இல்லாத இளம் வீரர்களும் இப்படி ஷாக் கொடுப் பார்கள் என்பதற்கு மார்க்கண்டே உதாரணம். 

ஐபிஎல் பல வீரர்களை உருவாக்கியிருக்கிறது. இந்த வருடம் அது மார்க்கண்டேவாகவும் இருக்கலாம்!

கலக்குங்க பாஸூ!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com