தோனியுடன் பிரச்னையா? நாங்கள் பேசுவதில்லையா? - மனம்திறந்த ஹர்பஜன் சிங்

தோனியுடன் பிரச்னையா? நாங்கள் பேசுவதில்லையா? - மனம்திறந்த ஹர்பஜன் சிங்
தோனியுடன் பிரச்னையா? நாங்கள் பேசுவதில்லையா? - மனம்திறந்த ஹர்பஜன் சிங்

ஓய்வு அறிவித்த பிறகு தோனியை தாக்கி பேசும் வகையில் ஹர்பஜன் சிங் சில கருத்துக்களை தெரிவித்ததால் இருவருக்குமிடையிலான மனகசப்பு குறித்த செய்திகள் பூதாகாரமாக வெடித்தது.  

கடந்த 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையைக் கைப்பற்றிய இந்திய அணியில் அங்கம் வகித்தவர்களில் முக்கியமானவர்கள் மகேந்திரசிங் தோனி மற்றும் ஹர்பஜன் சிங். உலகக் கோப்பைக்கு பிறகு இவர்கள் இருவருக்கும் இடையிலான உறவில் விரிசல் விழுந்ததாக கிரிக்கெட் வட்டாரத்தில் அரசல்புரசலாக பேசப்பட்டது. அதேநேரத்தில் எம்.எஸ்.தோனி மற்றும் ஹர்பஜன் சிங் ஆகிய இருவரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இணைந்து விளையாடியதால் அந்த பேச்சு அமுங்கியது. இருப்பினும்  நீண்ட காலம் இந்திய அணியின் வாய்ப்புக்காக காத்திருந்த ஹர்பஜன் அது கிடைக்காத காரணத்தினால் 2021 டிசம்பரில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்து விட்டார். ஓய்வு அறிவித்த பிறகு ஹர்பஜன் சிங் கொடுத்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியது. தோனியை தாக்கி பேசும் வகையில் சில கருத்துக்களை தெரிவித்ததால் இருவருக்குமிடையிலான மனகசப்பு குறித்த செய்திகள் பூதாகாரமாக  வெடித்தது.

''31 வயதில் 400 விக்கெட்டுகளை கைப்பற்றினேன். ஒரே ஒரே ராத்திரியில் இத்தனை விக்கெட்டுகளை அள்ளி விட முடியாது. அவர் ஏதாவது சிறந்ததாக செய்திருக்க வேண்டும். நான் இந்திய அணிக்காக பல போட்டிகளில் வென்று கொடுத்திருக்கிறேன். ஆனால் எந்த விளக்கமும் இல்லாமல், அணியில் இருந்து தூக்கி வீசப்பட்டேன். பிசிசிஐயும், தேர்வாளர்களும் எனக்கு பதில் அளிக்கவில்லை. அணியின் கேப்டன் கூட, என்ன நடந்தது என்பதை தெரிவிக்கவில்லை'' என்று கொட்டித்தீர்த்தார் ஹர்பஜன் சிங். தங்களுக்கிடையேயான கருத்து வேறுபாடு குறித்து தோனி மற்றும் ஹர்பஜன் சிங் ஆகிய இருவரும் நீண்ட காலமாக வாய் திறக்காமல் இருந்துவந்த நிலையில், தற்போது மவுனத்தை கலைத்திருக்கிறார் ஹர்பஜன் சிங்.  

விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஹர்பஜன் சிங், ''எம்எஸ் தோனி மீது எனக்கு எந்த மனக்கசப்பும் இல்லை. உண்மையில், அவர் இத்தனை ஆண்டுகளாக நல்ல நண்பராக இருந்தார். நான் பிசிசிஐ மற்றும் அதன் நிர்வாகத்தின் மீதுதான் குற்றஞ்சாட்டினேன். அப்போதிருந்த தேர்வுக்குழு வீரர்களை காரணமின்றி ஓரங்கட்டியது.  தேர்வுக்குழுவினருக்கு அணி ஒற்றுமையாக இருப்பது பிடிக்கவில்லை.

நாங்கள் இருவரும் இந்தியாவுக்காக நிறைய கிரிக்கெட் போட்டிகள் விளையாடி இருக்கிறோம். மிக மிக நல்ல நண்பர்களாக இருந்தோம், இப்போதும் இருக்கிறோம். அவர் அவருடைய கெரியரில் பிஸியாகிவிட்டார்; நான் என்னுடைய கெரியரில் பிஸியாகிவிட்டேன். அவ்வளவுதான். நாங்கள் இப்போதும் அடிக்கடி சந்தித்து பேசி வருகிறோம். எங்களுக்குள் எந்தப் பிளவும் இல்லை'' என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com