கிறிஸ் கெய்ல் முன் ஒரே ஓவரில் 6 சிக்சர்: ஆப்கான் வீரர் மிரட்டல்!
அதிரடி வீரர் கிறிஸ் கெயிலின் முன், ஒரே ஓவரில் ஆறு சிக்சர் அடித்து மிரட்டினார் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இளம் வீரர் ஒருவர்.
இந்தியாவில் ஐபிஎல் போல, ஆப்கானிஸ்தானில் ஏபிஎல் என்ற பெயரில் ஆப்கானிஸ்தான் பிரிமிரீயர் லீக் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் பல்வேறு நாட்டு வீரர்கள் பங்கேற்று ஆடி வருகின்றனர்.
சார்ஜாவில் நேற்று நடந்தபோட்டியில் காபுல் ஸ்வானன் அணியும் பால்க் லெஜண்ட்ஸ் அணியும் மோதின. அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் பங்கேற்றிருந்த பால்க் லெஜண்ட் அணி முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்தது.
பின்னர் காபுல் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக ரோஞ்சியும் ஹஸ்ரத்துல்லா சஸாயும் களமிறங்கி னர். நான்காவது ஓவரை அப்துல்லா மஸாரி வீசினார். அந்த ஓவரின் 6 பந்துகளையும் சிக்சருக்கு பறக்கவிட்டு அசத்தினார் ஹஸ்ரத்துல்லா சஸாய். அவர் 17 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதைக் கண்டு கிறிஸ் கெய்ல் உட்பட எதிரணி வீரர்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
பின்னர் சஸாய் கூறும்போது, ‘கிறிஸ் கெய்ல்தான் எனது ஆதர்சமான வீரர். அவர் முன்னால் இப்படி நான் ஆடியது எனக்கே கனவாகத்தான் இருக்கிறது. வழக்கமான எனது ஆட்டத்தை ஆடினேன். இதில் நான் சில சாதனைகளை செய்திருப்பதாகக் கூறுகிறார்கள். இதன்மூலம் என் பெயரும் கிரிக்கெட்டில் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்றார்.
இவர் இப்படி சிக்சராக அடித்திருந்தாலும் அந்த அணியால் 7 விக்கெட் இழப்புக்கு 223 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் பால்க் லெஜண்ட் வெற்றி பெற்றது.
இதற்கு முன், கேரி சோபர்ஸ், ரவி சாஸ்திரி, கிப்ஸ், யுவராஜ் சிங், ரோஸ் வொயிட்லி ஆகியோர் ஒரே ஓவரில் ஆறு சிக்சர்க ளை அடித்துள்ளனர்.
அதே போல மிகக் குறைந்த பந்துகளில் (12) அரை சதம் அடித்தவர்கள் பட்டியலில் சஸாரியும் இணைந்துள்ளார்.