இன்சமாம் மருமகன் சதம்: இலங்கை மீண்டும் பரிதாபம்!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல்-ஹக்கின் மருமகன் இமாம் உல் ஹக், அறிமுக போட்டியில் நேற்று சதமடித்து சாதனை படைத்தார்.
பாகிஸ்தான் - இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையேயான கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. 2 டெஸ்ட் கொண்ட தொடரை இலங்கை அணி கைப்பற்றியது. 5 ஒரு நாள் போட்டி தொடரில் முதல் 2 போட்டியில் பாகிஸ்தான் வென்றது. 3-வது ஒருநாள் போட்டி அபுதாபியில் நேற்று நடந்தது.
முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி, பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. கடந்த போட்டியில் சதமடித்த அந்த அணியின் கேப்டன் உபுல் தாரங்கா, இந்தப் போட்டியில் 61 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆக, அந்த 48.2 ஓவர்களில் 208 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணியின் ஹாசன் அலி 34 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டை வீழ்த்தினார். பின்னர் ஆடிய பாகிஸ்தான், 42.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. அந்த அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய, முன்னாள் வீரர் இன்சமாம் உல் ஹக்கின் மருமகன் இமாம் உல் ஹக் சதமடித்து அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் ஒரு நாள் போட்டித் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியது.
இலங்கை அணி ஒரு நாள் போட்டியில் தொடர்ந்து தோல்வியடைந்து வருவது அந்நாட்டு ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.