”நிலைமை இப்படியே தொடர்ந்தால் நாங்கள் மல்யுத்தத்தை கைவிட வேண்டியிருக்கும்" - இளம் வீராங்கனைகள் வேதனை!

பிரிஜ் பூஷன் மீதான பாலியல் புகாரால் மல்யுத்த போட்டிகளுக்கு தயாராகிவரும் இளம் வீராங்கனைகள் மத்தியில் பெரும் அவநம்பிக்கை நிலவுவதாக ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மல்யுத்த பயிற்சியாளர்கள் மற்றும் வீராங்கனைகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மல்யுத்த வீராங்கனைகள்
மல்யுத்த வீராங்கனைகள்twitter page

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக, இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்யக்கோரி நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 23 முதல் தங்கள் போராட்டத்தை மீண்டும் தொடங்கினர். இவர்களுடைய போராட்டத்திற்கு விவசாய அமைப்புகள் , தனியார் அமைப்புகள் எனப் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆயினும், பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக மத்திய அரசு இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்த நிலையில், கடந்த 28ஆம் தேதி, அதாவது புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பின்போது நாடாளுமன்றத்தை நோக்கி இவர்கள் அனைவரும் பேரணியாக சென்றனர். அப்போது அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதற்கு தமிழ்நாடு முதல்வர் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்தச் சூழலில், மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கிடைக்காததால், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இளம் மல்யுத்த வீராங்கனைகளும், அவர்களது பெற்றோர்களும் கவலையடைந்து உள்ளனர். ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ரோஹ்தக்கில் (மாவட்டம்) உள்ள டிடோலி, கித்வாலி, சுந்தர்பூர் மற்றும் ஜஜ்ஜாரில் (மாவட்டம்) உள்ள சாரா, சோனிபட்டில் (மாவட்டம்) உள்ள கோஹானா ஆகிய கிராமங்களில் குறைந்தது 15 மல்யுத்த வீராங்கனைகள் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த மூன்று மாவட்டங்களும், இந்தியாவின் மல்யுத்த பெல்ட்’ என்று அழைக்கப்படுகின்றன. இங்கிருந்துதான் சோனம் மாலிக், பிங்கி மாலிக், சாக்‌ஷி மாலிக் மற்றும் ரீத்திகா ஹூடா உள்ளிட்ட வீராங்கனைகள் உருவாக்கப்பட்டுள்ளனர்.

கித்வாலி கிராமத்தைச் சேர்ந்த மல்யுத்த அகாடமி பயிற்சியாளரான ஜோகிந்தர், “பிரிஜ் பூஷன் மீதான பாலியல் குற்றச்சாட்டால் இப்போதெல்லாம் என்னிடம் பயிற்சிக்கு வரும் வீராங்கனைகள் தங்களது பெற்றோருடனே வருகிறார்கள். பெண் பிள்ளைகளை தனியாக அனுப்ப தயங்குகிறார்கள். தவிர சமீபகாலமாக இளம் பெண்கள் மல்யுத்த பயிற்சிக்கு சேருவது குறைந்துவிட்டது” என்கிறார்.

கோஹானா கிராமத்தைச் சேர்ந்த பயிற்சியாளர் அஜ்மீர் மாலிக், “பிரிஜ் பூஷன் சிங் மீதான குற்றச்சாட்டுகள் வெளிவந்த பிறகு, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அகாடமிக்குள் சுதந்திரமாய் விடுவதற்குக்கூடத் தயங்குகின்றனர். சில பெற்றோர்கள் என்னையே சந்தேகப் பார்வையுடன் பார்க்கின்றனர். இதற்கான காரணம் எனக்கும் புரிகிறது. பிரிஜ் பூஷன் மீது வைக்கப்பட்டிருக்கும் பாலியல் குற்றச்சாட்டே அவர்களை ஓர் அச்ச உணர்வுக்கு தள்ளியிருக்கிறது. ஆனால், நான் எனது மாணவர்களுக்கு சிறந்ததை மட்டுமே கற்றுக் கொடுக்க விரும்புகிறேன். மேலும் அவர்களை உலக அளவில் சாதனை படைக்கும் அளவுக்கு வளர்த்தெடுக்க விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இவர்தான் கடந்த 2022ஆம் ஆண்டு பல்கேரியா நாட்டில் நடைபெற்ற உலக ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் சோனம் மாலிக் வெள்ளிப் பதக்கம் வெல்வதற்கு பயிற்சி அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சாரா கிராமத்தைச் சேர்ந்த பயிற்சியாளர் வீரேந்தர் தலால் “தற்போது மல்யுத்த வீராங்கனைகள் நடத்தி வரும் போராட்டத்தால், வளரும் இளம் தலைமுறை மல்யுத்த வீராங்கனைகள்கூடப் பயப்படத் தொடங்கிவிட்டனர். இதனால் இனி என்ன நடக்கும் என எங்களுக்குத் தெரியாது. ஆனால், என்னுடைய மாணவர்களை எங்கும் தனியாக இருக்க விடுவதில்லை” என்று கூறியுள்ளார்.

அதேநேரத்தில் சமீபத்தில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்ற தலால் மகள் ஸ்வாதி, “இந்த தயக்கம் இளம் பெண் மல்யுத்த வீரர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை விரைவாக சுருக்குகிறது. மேலும், எந்த மல்யுத்த முகாம்களுக்கும் அவர்களைத் தனியாகச் செல்ல அனுமதிப்பதில்லை. ஆனால் WFI ஆல் நடத்தப்படும் தேசிய முகாம்களுக்கு வரும்போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் இருக்க முடியாது” என்கிறார்.

மல்யுத்த பயிற்சி பெற்றுவரும் 17 வயதான காஜல், "சர்வதேச அளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த வீரர், வீராங்கனைகள் கடுமையான அநீதிகளை எதிர்கொள்கிறார்கள். அவர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் யார் தட்டிக்கேட்பார்கள் என்பதே தெரியவில்லை. நிலைமை இப்படியே தொடர்ந்தால் நாங்கள் மல்யுத்தத்தை கைவிட வேண்டியிருக்கும்" என்கிறார் காஜல் .” என்கிறார்.

காஜலின் தோழியும் மல்யுத்த வீராங்கனையுமான சிம்ரன், “பிரிஜ் பூஷன் சரண் சிங் மாதிரியான நபர்கள் இருந்தால் நிச்சயம் எங்களால் மல்யுத்த துறையில் நீடிக்க முடியாது. நாங்கள் கபடி அல்லது குத்துச்சண்டைக்கு மாறுவோம் என நினைக்கிறோம். இந்த நேரத்தில் எங்களுக்கு உறுதியாக சொல்ல தெரியவில்லை'' என்கிறார் அவர்.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் மல்யுத்த பயிற்சிக்காக இரண்டு வேளையும் தங்கள் குழந்தைகளுடன் பெற்றோர்கள் உடன் செல்ல முடியாத நிலையும் ஏற்படுவதாக பயிற்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். வேலை, பொருளாதாரம் உள்ளிட்ட பிரச்னைகளை குழந்தைகளின் பெற்றோர்கள் எதிர்கொள்கின்றனர். வீராங்கனையை பயிற்சி மற்றும் போட்டி நடைபெறும் இடங்களுக்கு அழைத்துச் செல்வதால் பெற்றோருக்கு இரட்டிப்பு செலவாகிறது. தவிர, சில பெற்றோர்களுக்கு போதிய கல்வியறிவு இல்லாததால், குறித்த நேரத்து தங்களுடைய குழந்தைகளை அழைத்துச் செல்வதில் சிரமப்படுகின்றனர். இதனால் குழந்தைகளைத் தனியாக அனுப்பும்போதோ அல்லது பிறர் மூலம் அனுப்பப்படும் போதோதான் இத்தகைய பிரச்னைகள் நிலவுகின்றன. ஆனால், எங்கிருந்தாலும் திறமையானவர்களை ஊக்கப்படுத்துவது நமது கடமை. அதுபோல் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாகவும் குரல் கொடுப்போம்; களத்தில் நிற்போம்” என்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com