"டி20 போட்டிகளில் முகமது சிராஜூக்கு பதிலாக இவரை சேர்க்கலாம்" - தினேஷ் கார்த்திக்
இந்திய டி20 கிரிக்கெட் அணியில் முகமது சிகாஜூக்கு பதிலாக ஹர்ஷல் படேலை சேர்க்கலாம் என்று இந்திய கிரிகிக்டெ் வீரரும் வர்ணனையாருமான தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இந்திய - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று ஜெய்பூரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. இந்தப் போட்டியில் 4 ஓவர்களை வீசிய சிராஜ் 1 விக்கெட் கைப்பற்றி 39 ரன்களை கொடுத்தார். ஆனால் முகமது சிராஜ் அதிக ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். இது குறித்து தினேஷ் கார்த்திக் "கிரிக்பஸ்" இணையதளத்துக்கு பேசியுள்ளார்.
அதில் " சிராஜ், ஹர்ஷல் ஆகியோர் சிறப்பாகவே பந்துவீசி வருகின்றனர். நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு யாரை வேண்டுமானாலும் அணியில் சேர்க்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் என்னைப் பொறுத்தவரை ஹர்ஷல் படேல், சிராஜைவிட சிறந்தவர் என தோன்றுகிறது. அவரிடம் பந்துவீச்சில் நிறைய மாற்றங்கள் இருக்கிறது. ஸ்லோ பந்துகளை லாவகமாக வீசும் திறன் அதிகமிருக்கிறது. இத்தகைய பந்துவீச்சு டி20 போட்டிகளுக்கு பெரிதும் உதவும்" என்றார்.
மேலும் பேசிய தினேஷ் கார்த்திக் "ஹர்ஷல் படேலை போல ஆவேஷ் கானும் சிறந்த பந்துவீச்சாளர்தான். எனக்கு தெரிந்தவரை முதல் போட்டியில் சிராஜூக்கு ஏற்ற ஓவர்களில் அவருக்கு பந்துவீச வாய்ப்பு அளிக்கப்படவில்லை. எப்போது பேட்ஸ்மேன்கள் மிடில் ஓவர்களில் ஆதிக்கம் செலுத்துகிறார்களோ அப்போதுதான் சிராஜை உபயோகப்படுத்தியிருக்க வேண்டும்" என்றார் தினேஷ் கார்த்திக்.