ஹர்மன்ப்ரீத் ரன் அவுட்... தோனியுடன் ஒப்பிட்டுப் பேசும் ரசிகர்கள்!

ஹர்மன்ப்ரீத் ரன் அவுட்... தோனியுடன் ஒப்பிட்டுப் பேசும் ரசிகர்கள்!
ஹர்மன்ப்ரீத் ரன் அவுட்... தோனியுடன் ஒப்பிட்டுப் பேசும் ரசிகர்கள்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பையில் ரன் அவுட்டான ஹர்மன்ப்ரீத்தை, தோனியின் ரன் அவுட்டுடன் ஒப்பிட்டு, அதை நினைவுகூர்ந்தும் இதை விமர்சித்தும் வருகின்றனர் நெட்டிசன்கள்.

தென்னாப்பிரிக்காவில் 8வது மகளிர் டி20 உலகக்கோப்பை நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியுற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. பின்னர், 173 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கியிருந்தனர் இந்திய வீராங்கனைகள். இதில் அணியின் தொடக்க வீராங்கனைகள் விரைவிலேயே நடையைக் கட்டியதால், 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோருக்கு பொறுப்பு கூடியது.

அதை உணர்ந்து ஆடிய அவர்களும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். அதில் அதிரடியாக விளையாடிய ரோட்ரிக்ஸ், 24 பந்துகளில் 43 ரன்களை சேர்த்தபின் அவுட்டானார். மறுமுனையில் அபாரமாக விளையாடிய ஹர்மன்ப்ரீத் கவுர் 34 பந்துகளில் 52 ரன்களை (6 பவுண்டரி, 1 சிக்ஸர்) சேர்த்தபோது, ரன் - அவுட் முறையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்தடுத்து வந்த வீராங்கனைகளும் அதிரடியாய் விளையாடியபோதும், 20 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறவில்லை என்றாலும், ஹர்மன்ப்ரீத் கவுரை சமூகவலைதளங்களில் இந்திய ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ஹர்மன்ப்ரீத்தை பொறுத்தவரை, நேற்றைய ஆட்டத்தில் அவர் 52 ரன்கள் எடுத்திருந்தபோது ரன்அவுட் ஆனதால்தான் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு மங்கத் தொடங்கியது. 52-வது ரன்னுக்குப்பின் அடுத்த ரன்னை எடுப்பதற்கு ஹர்மன்ப்ரீத் ஓடியபோது, க்ரீஸுக்கு வெளியே பேட் சிக்கிக் கொண்டதால் அவர் ரன் அவுட் ஆனார். சரியான நேரத்தில் ஆஸி. வீராங்கனை அலிசா ஹீலி, அவரை ரன் அவுட் செய்ய, அதன் பிறகு இந்திய அணியின் தோல்வி உறுதியானது. இதெல்லாம் சரி... இதற்கும் தோனியின் ரன் -அவுட்டுக்கும் என்ன தொடர்பு என்கின்றீர்களா?

இதேபோன்று, 2019ஆம் ஆண்டு இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதியில் முன்னாள் கேப்டன் தோனி, ரன் அவுட்டாகியிருந்தார். அந்தப் போட்டியில் ஆட்டத்தின் 49வது ஓவரில், 2 ரன்கள் எடுக்க தோனி முயற்சி செய்தபோது, மார்ட்டின் கப்தில் வீசிய த்ரோ நேராக ஸ்டெம்பை பதம் பார்க்க, மில்லி மீட்டர் கணக்கில் தோனி ரன் அவுட்டாகி நடையைக்கட்டினார். இதனால் அந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வியுற்றது. இதேபோன்ற சூழ்நிலை தற்போது ஹர்மன்ப்ரீத்துக்கும் ஏற்பட்டதால், இரண்டையும் ஒப்பிட்டு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com