தோனி வழியில்... கோப்பையை பிருத்வி ஷா கையில் கொடுத்து அழகு பார்த்த ஹர்திக் பாண்டியா

தோனி வழியில்... கோப்பையை பிருத்வி ஷா கையில் கொடுத்து அழகு பார்த்த ஹர்திக் பாண்டியா
தோனி வழியில்... கோப்பையை பிருத்வி ஷா கையில் கொடுத்து அழகு பார்த்த ஹர்திக் பாண்டியா

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டிக்கு பின் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கேப்டன் ஹர்திக் பாண்டியா செய்த செயல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறியது. தொடரை வெல்லப் போவது யார்? என்பதை தீர்மானிக்கும் இந்த போட்டியில், இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை புரட்டியெடுத்து இமாலய வெற்றியை பதிவு செய்தது. ருத்ரதாண்டவமாடிய சுப்மன் கில் 12 பவுண்டரி, 7 சிக்சருடன் 126 ரன்கள் விளாசினார்.

இந்நிலையில் போட்டிக்கு பின் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கேப்டன் ஹர்திக் பாண்டியா செய்த செயல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. பரிசளிப்பு விழாவில் வெற்றிக் கோப்பையை வாங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா, அந்தக் கோப்பையை ப்ரித்வி ஷாவிடம் ஒப்படைத்தார். இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய ப்ரித்வி ஷா கோப்பையை உயர்த்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ப்ரித்வி ஷாவின் கையில் கோப்பை இருந்த நிலையில்தான் இந்திய வீரர்களும் குரூப் போட்டோவிற்கு போஸ் கொடுத்தனர்.

உள்ளூர் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்த தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு பெற்ற ப்ரித்வி ஷாவுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. இதனால் ப்ரித்வி ஷாவை கவுரவிக்கும் விதமாக கேப்டன்  ஹர்திக் பாண்டியா அவரிடம் கோப்பையை கொடுத்து அழகு பார்த்தார்.

தோனி வழியில் ஹர்திக் பாண்டியா

எம்எஸ் தோனியும் கேப்டனாக பல முறை வெற்றிக் கோப்பைகளை வாங்கியுள்ளார். ஆனால் கோப்பையை வாங்கிய பிறகு, தோனி எப்போதும் கோப்பையை இளம் வீரர்களிடம் ஒப்படைத்து விட்டு, ஓரமாக நின்று கொண்டாட்டத்தில் ஈடுபடுவார். அதேபோன்று, தோனி வழியில் ஹர்திக் பாண்டியாவும் கோப்பையை இளம் வீரரிடம் கொடுத்து அழகு பார்த்த செயல் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 

உள்ளுணர்வுக்கு மதிப்பு கொடுப்பேன்

போட்டி முடிந்தபின் ஹர்திக் பாண்டியா கூறுகையில், “மைதானத்தை பற்றி முன்கூட்டியே இருக்கும் ஐடியாக்களை எடுத்துக் கொள்ளாமல், அன்றைய நாள் ஆட்டத்திற்கு என்ன தேவை என்பதை திட்டமிடுவேன். என்னுடைய கேப்டன்ஷியில் பெரிதாக யோசித்து குழப்பிக் கொள்ளாமல் எளிமையான ஐடியாக்களை செயல்படுத்த நினைப்பேன். அதிகமாக என்னுடைய உள்ளுணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பேன். இது தோல்வியடைந்தால், முழுக்க முழுக்க என்னுடைய தோல்வியாக இருக்கும். ஐபிஎல் இறுதி போட்டியில் இந்த மைதானத்தில் விளையாடிய அனுபவம் உள்ளது. ஐபிஎல் முற்றிலும் மாறுபட்டது. அப்போது வேறு விதமாக யோசிக்கவேண்டும். ஆனால், சர்வதேச போட்டிகள் வித்தியாசமானவை. இதற்கு வேறு மாதிரியாக சிந்திக்க வேண்டும். முதலில் பேட்டிங் செய்தால் இந்திய அணியால் வெற்றி பெற முடியும் என யோசித்து வந்தேன். அது சரியாக நடந்துவிட்டது” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com